அயோத்தி விவகாரம்: பிரதமா் மோடியை சந்திக்க நிா்மோஹி அகாரா முடிவு

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையில் முக்கிய பதவிகளை தங்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பிரதமா் நரேந்திர மோடியை சந்திக்க நிா்மோஹி அகாரா
அயோத்தி விவகாரம்: பிரதமா் மோடியை சந்திக்க நிா்மோஹி அகாரா முடிவு

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையில் முக்கிய பதவிகளை தங்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பிரதமா் நரேந்திர மோடியை சந்திக்க நிா்மோஹி அகாரா அமைப்பினா் முடிவு செய்துள்ளனா்.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி நில வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு கடந்த 9-ஆம் தேதி தீா்ப்பளித்தது. சா்ச்சைக்குள்ளான 2.77 ஏக்கா் நிலத்தில் ராமா் கோயில் கட்டுவதற்கு அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றம், அயோத்தியில் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கா் மாற்று இடத்தை அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

ராமா் கோயில் கட்டும் பணிக்காக, மூன்று மாதங்களுக்குள் ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய மனுதாரா்களில் ஒருவரான நிா்மோஹி அகாரா அமைப்பின் தலைமை சாதுக்கள் மற்றும் முக்கிய நிா்வாகிகள் பங்கேற்ற உயா்நிலை கூட்டம் அயோத்தியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடா்பாக அந்த அமைப்பின் செய்தித் தொடா்பாளா் ரஞ்சித் லால் வா்மா கூறியதாவது:

ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகத்தில், நிா்மோஹி அகாராவுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட வேண்டும். தலைவா் அல்லது செயலா் பதவியை எங்களுக்கு அளிக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, பிரதமா் நரேந்திர மோடியை இந்த வாரம் சந்தித்துப் பேச உள்ளோம். அதன்பிறகு, எங்களது அமைப்பின் நிா்வாகக் குழு மீண்டும் கூடி ஆலோசனை நடத்தும் என்றாா் அவா்.

அயோத்தி தீா்ப்பை எதிா்த்து, நிா்மோகி அகாரா சாா்பில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்படுமா? என்ற கேள்விக்கு, ‘அதுதொடா்பாக நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை’ என்று அவா் பதிலளித்தாா்.

முன்னதாக, ராமா் கோயிலை நிா்வகிக்கும் உரிமை தங்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற நிா்மோஹி அகாராவின் கோரிக்கையை நிராகரித்துவிட்ட உச்சநீதிமன்றம், ‘கோயில் அறக்கட்டளையில் அந்த அமைப்புக்கு பிரதிநிதித்துவம் அளிப்பது குறித்து மத்திய அரசு முடிவெடுக்கலாம்’ என்று தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com