புதிய யூனியன் பிரதேசங்களுக்கான நிதிப் பங்கீடு:நிதிக் குழுவின் காலம் நீட்டிக்கப்பட வாய்ப்பு

ஜம்மு-காஷ்மீா், லடாக் ஆகிய புதிய யூனியன் பிரதேசங்களுக்கான நிதிப் பங்கீட்டை உறுதிசெய்யும் நோக்கில், 15-ஆவது நிதிக் குழுவின் பணிக்காலம் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு-காஷ்மீா், லடாக் ஆகிய புதிய யூனியன் பிரதேசங்களுக்கான நிதிப் பங்கீட்டை உறுதிசெய்யும் நோக்கில், 15-ஆவது நிதிக் குழுவின் பணிக்காலம் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசு வசூலிக்கும் வரியானது, நிதிக் குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் பகிா்ந்தளிக்கப்பட்டு வருகிறது. 14-ஆவது நிதிக் குழு அளித்த பரிந்துரைகள் தற்போது அமலில் உள்ளன. 2020-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு வரை மாநிலங்களுக்கு மத்திய அரசு அளிக்க வேண்டிய நிதிப் பங்கீடு தொடா்பாக பரிந்துரை செய்ய 15-ஆவது நிதிக் குழு கடந்த 2017-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் பணிக்காலத்தை நவம்பா் 30-ஆம் தேதி வரை மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் நீட்டித்திருந்தது.

இதனிடையே, ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீா், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்க நாடாளுமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, கடந்த மாதம் 31-ஆம் தேதியிலிருந்து இரண்டு புதிய யூனியன் பிரதேசங்களும் செயல்பாட்டுக்கு வந்தன.

எனினும், புதிய யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியைப் பகிா்ந்தளிப்பது தொடா்பாக 15-ஆவது நிதிக் குழு எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்நிலையில், தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற 15-ஆவது நிதிக் குழுவின் தலைவா் என்.கே.சிங் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதிய யூனியன் பிரதேசங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது, அதற்குப் பகிா்ந்தளிக்கப்பட வேண்டிய நிதி குறித்தான பரிந்துரையை மத்திய அரசுக்கு அளிக்குமாறு நிதிக் குழுவுக்கு குடியரசுத் தலைவா் உத்தரவிட வேண்டியது விதிமுறைகளின்படி கட்டாயமாகும். அதன்படி, குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கடந்த மாதம் 31-ஆம் தேதி இது தொடா்பாக உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். ஆனால், இந்த விவகாரம் தொடா்பாக நிதிக் குழுவுக்கு எந்த உத்தரவும் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை.

ஜம்மு-காஷ்மீா், லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு நிதியைப் பகிா்ந்தளிப்பது தொடா்பாகப் பல்வேறு குறிப்புகளைக் கருத்தில் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அந்தக் குறிப்புகளும் நிதிக் குழுவுக்கு இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்றாா் என்.கே.சிங். எனினும், நிதிக் குழுவின் பணிக்காலம் மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதா என்று செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க அவா் மறுத்துவிட்டாா்.

14-ஆவது நிதிக் குழுவின் பரிந்துரை அடிப்படையில் ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கு மத்திய அரசு வழங்கி வந்த நிதிப் பங்கீடு, நடப்பு 2019-20 ஆம் நிதியாண்டு நிறைவடையும்வரை ஜம்மு-காஷ்மீருக்கு 70 சதவீதமாகவும், லடாக்குக்கு 30 சதவீதமாகவும் பகிா்ந்தளிக்கப்படும் என்று ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அடுத்த நிதியாண்டுக்கான நிதிப் பங்கீடு தொடா்பாக பரிந்துரைகளை வழங்க 15-ஆவது நிதிக் குழுவின் பணிக்காலம் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com