அயோத்தி தீர்ப்பு நீதித்துறையின் மைல்கல்லாக அமைந்துள்ளது: மனதின் குரலில் பிரதமர் மோடி உரை

'முப்பது கோடி முகமுடையாள், உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்' என்ற பாரதியாரின் பாடலை மேற்கோள் காட்டி மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான 'மான் கி பாத்' (மனதின் குரல்) 59-வது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை.
அயோத்தி தீர்ப்பு நீதித்துறையின் மைல்கல்லாக அமைந்துள்ளது: மனதின் குரலில் பிரதமர் மோடி உரை

அயோத்தி நில வழக்கு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நாட்டில் நீதித்துறைக்கு ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். 'முப்பது கோடி முகமுடையாள், உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்' என்ற பாரதியாரின் பாடலை மேற்கோள் காட்டி மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான 'மான் கி பாத்' (மனதின் குரல்) 59-வது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றியதாவது,

ஒருபுறம், நீடித்த சட்டப் போர் இறுதியாக முடிவுக்கு வந்துவிட்டது. மறுபுறம், நீதித்துறை மீதான மரியாதை நாட்டில் வளர்ந்துள்ளது. உண்மையான அர்த்தத்தில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நீதித்துறையின் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது.

வரலாற்று அயோத்தி தீர்ப்பின் பின்னர் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணிய குடிமக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், “அயோத்தி வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்தபின், 130 கோடி இந்தியர்களுக்கும் தேசிய நலன் தான் எப்போதும் முக்கியம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர். நம் நாட்டில் அமைதி, ஒற்றுமை மற்றும் நல்லெண்ணம் எப்போதும் போன்று முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

நம்பிக்கைகள் நிறைந்த புதிய பாதையில் புதிய இந்தியா முன்னேறி வருகிறது என்று கூறினார். நவம்பர் 9 ம் தேதி அமைதியை நிலைநாட்டுமாறு மக்களை வலியுறுத்தியதோடு, 2010-ல் அலகாபாத் உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பளித்த பின்னர் மக்களை ஒன்றிணைக்க அரசியல் கட்சிகளும், சமூகமும் எவ்வாறு கட்டுப்பாடுகளுடன் அறிக்கைகளை அளித்தன என்று உரையாற்றியதை நினைவு கூர்ந்தார். 

அந்த நேரத்தில் சிலர் தங்கள் சொந்த நலனுக்காக நிலைமையை பயன்படுத்த முயன்றனர். ராமர் கோயில் அமைக்கும் இடம் தொடர்பாக மத்திய அரசு அடுத்த 3-4 மாதங்களுக்குள் ஒரு அறக்கட்டளையை அமைத்து, அதை சம்பந்தப்பட்டவர்களிடம் உரிய நேரத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மசூதி கட்டுவதற்காக அயோத்தியில் ஒரு முக்கிய இடத்தில் மாற்று ஐந்து ஏக்கர் நிலத்தையும் உச்ச நீதிமன்றம் ஒதுக்கியுள்ளது என்று தெரிவித்தார்.

டிசம்பர் 7-ஆம் தேதி முப்படைகளின் கொடி தினம் கொண்டாடப்படுகிறது. அனைவரும் இந்த தினத்தைக் கொண்டாட முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் வீரர்களின் தியாகத்துக்கும் நன்றி தெரிவிக்கிறேன். நாம் ஒவ்வொருவரும் ஒரு ஆயுதப்படைக் கொடியை அந்நாளில் வைத்திருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

சிபிஎஸ்இ பள்ளிகள் 'ஃபிட் இந்தியா வாரம்' என்ற முயற்சியைத் தொடங்கியுள்ளது. டிசம்பர் மாதத்தில் பள்ளிகள் இதை கொண்டாடலாம். இதன்மூலம் பல்வேறு வகை விளையாட்டு, யோகா மற்றும் நடனம் உள்ளிட்ட பல உடற்பயிற்சி செயல்பாடுகள் மூலம் உடல்திறன் தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்கு எளிதில் தீர்வு காண முடியும். இதை அனைத்து பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதில் நிச்சயம் பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

'முப்பது கோடி முகமுடையாள், உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்' என்ற பாரதியாரின் பாடலை மேற்கோள் காட்டி, நமது நாட்டுக்கு 30 கோடி முகங்கள் இருந்தாலும், தேசம் என்ற ஒரே உடலை தான் கொண்டுள்ளோம் என்ற அர்த்தத்தை வலியுறுத்தி, 18 வகை மொழிகள் இங்கு பேசப்பட்டாலும், நாம் அனைவரும் இந்தியர் என்பதில் ஒற்றுமையாக இருக்கிறோம். ஒவ்வொன்றும் நமக்கு ஒன்றை கற்றுத் தருகின்றன என்று பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com