காற்று மாசுபாட்டில் வாழ்வதை விட மக்களை கொன்றுவிடலாமே? உச்ச நீதிமன்றம் காட்டம்

காற்று மாசுபாட்டைக் குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
காற்று மாசுபாட்டில் வாழ்வதை விட மக்களை கொன்றுவிடலாமே? உச்ச நீதிமன்றம் காட்டம்


புது தில்லி: காற்று மாசுபாட்டைக் குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

பயிர்கழிவுகள் எரிப்பு தொடர்பாக விளக்கமளிக்க பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம், தில்லி மாநில செயலர்களை ஆஜராகுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இன்று நீதிமன்றத்தில் ஆஜரான அவர்களிடம் பல்வேறு கேள்விகளையும் நீதிபதிகள் எழுப்பினர்.

தில்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசுபாடு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஷ்ரா, தீபக் குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு, ஏன் இப்படி காற்று மாசுபட்டில் மக்களை வாழும்படி நிர்பந்திக்க வேண்டும்? அவர்கள் அனைவரையும் வெடிகுண்டை வீசி கொன்றுவிடலாமே?  என்று கேள்வி எழுப்பினர்.

தலைநகர் தில்லியில் இன்று காற்றின் மாசு அளவு 218 ஆக இருந்தது. இது மோசம் என்ற நிலையைக் குறிக்கும்.

மேலும் பேசிய நீதிபதிகள், மத்திய மற்றும் தில்லி அரசுகள் தங்களுக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகளை ஓரம்கட்டிவிட்டு, தில்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்த காற்று சுத்திகரிப்பு கோபுரங்களை அமைப்பதற்கு 10 நாட்களுக்குள் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

பயிர்க் கழிவுகள் எரிப்பதைக் கூட தடுத்து நிறுத்துமுடியவில்லை என்று கூறி நம் நாட்டைப் பார்த்து மக்கள் சிரிக்கிறார்கள். ஒருவர் மீது ஒருவர் பழிபோடும் விளையாட்டால் மக்களுக்கு நன்மை பயக்காது. நீங்கள் இதனை பழிபோடும் விளையாட்டாகவே கருதுகிறீர்கள். யாருமே இதன் தீவிரத்தை உணர்ந்து கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

நீதிபதி அருண் மிஷ்ரா கூறுகையில், நரகத்தை விடவும் மோசமாக தில்லி மாறிவிட்டது. இந்தியாவில் வாழ்வது என்பது அவ்வளவு எளிதாக இல்லை. இந்த நாற்காலியில் அமர உங்களுக்கு உரிமை இல்லை என்றும் காட்டமாகக் கூறினார்.

பயிர்க் கழிவுகளை எரிப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து பஞ்சாப் மாநில செயலரிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மக்களை இப்படித்தான் கையாள்வீர்களா? அவர்கள் இறப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதா? எங்களது உத்தரவுக்குப் பிறகு பயிர்க் கழிவுகள் எரிப்பு அதிகரித்திருப்பது ஏன்?  என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பயிர்க் கழிவு எரிப்பினால் உங்களுக்கு அருகே இருக்கும் தில்லி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com