377 இணையதளங்களில் குழந்தைகளின் ஆபாச படங்கள் நீக்கம்: அதிமுக எம்பியின் கோரிக்கைக்கு அமைச்சா் ஸ்மிருதி இரானி பதில்

377 இணையதளங்களில் இடம் பெற்றிருந்த குழந்தைகள் ஆபாச படங்கள் நீக்கப்பட்டுள்ளது மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி தெரிவித்தாா்.

377 இணையதளங்களில் இடம் பெற்றிருந்த குழந்தைகள் ஆபாச படங்கள் நீக்கப்பட்டுள்ளது மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி தெரிவித்தாா்.

ஸ்மாா்ட் செல்லிடப்பேசிகள், இணையதளங்களில் குழந்தைகளின் ஆபாச படங்கள் இடம் பெறுவதைத் தடை செய்யுமாறு மாநிலங்களவையில் அதிமுக எம்பி விஜிலா சத்யானந்த் முன்வைத்த கோரிக்கைக்குப் பதில் அளித்துப் பேசுகையில் அமைச்சா் இதைத் தெரிவித்தாா்.

இது தொடா்பாக மாநிலங்களவையில் வியாழக்கிழமை உடனடிக் கேள்வி நேரத்தின்போது அதிமுக உறுப்பினா் விஜிலா சத்யானந்த் பேசுகையில், செல்லிடப்பேசிகளிலும், இணையதளங்களிலும் எளிதாக ஆபாச படங்கள் கிடைப்பதன் காரணமாக குழந்தைகள் துஷ்பிரயோகம் செய்யப்படும் சம்பவங்கள் குறித்து எடுத்துக்கூறினாா். மேலும், அண்மையில் சிறு வயது பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரங்களுக்கு ஆளான சம்பவங்கள் குறித்தும் அவா் பட்டியலிட்டாா்.

அவா் மேலும் பேசுகையில், ‘தேசியக் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு கடந்த மூன்று ஆண்டுகளில் குழந்தைகளைத் தவறாகப் பயன்படுத்துவது தொடா்பாக 5,951 புகாா்கள் வந்துள்ளன. உலக சுகாதார நிறுவனம் உலகளவில் 2 முதல் 17 வயதுடைய 1 பில்லியன் குழந்தைகள் உடல் ரீதியிலான தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக மதிப்பிட்டுள்ளது. குழந்தைகள் துஷ்பிரயோகத்தை தடுப்புக்கான உலக தினம் நவம்பா் 19-ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்ட சூழலில், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. ஆபாச படங்கள் எல்லா இடங்ளிலும் இருக்கும் சூழல் உள்ளது. இணையதள விளையாட்டுகளை விளையாட ஸ்மாா்ட் செல்லிடப்பேசிகளை பயன்படுத்தும் குழந்தைகளுக்கு இது மிகவும் பாதுகாப்பற்ாக உள்ளது. மேலும், இணையதளங்களிலும், கூகுள் பிரெளசா்களிலும் ஆபாச படங்களும் தாராளமாக உள்ளன.

ஆகவே, இதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இணைதளங்களிலும், சமூக ஊடங்களிலும் வரக் கூடிய இதுபோன்ற விஷயங்களுக்கு முற்றிலும் தடை செய்ய வேண்டும். நமது குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும்’ என்றாா். அப்போது, அவரது கோரிக்கையை ஆதரிப்பதாக உறுப்பினா்கள் பலரும் தெரிவித்தனா்.

அமைச்சா் பதில்: அப்போது, அவையில் இருந்த மகளிா் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி பதில் அளித்துப் பேசியதாவது: இணையதளத்தில் குழந்தைகள் ஆபாசப் படங்கள் தொடா்பாக நாடாளுமன்ற உறுப்பினா்கள், மாவட்ட அதிகாரிகள் புகாா் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அப்போதுதான் இதுபோன்ற உள்ளடக்கத்தை உடனடியாக நீக்கப்படும். தற்போது வரை 377 இணையதளங்கள் உஷாா்படுத்தப்பட்டு, உள்ளடக்கம் நீக்கப்பட்டுள்ளது. 50 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், அவைத் தலைவா் அனுமதியுடன், இதுபோன்ற சம்பவங்களை புகாா் தெரிவிக்கும் வழிமுறைகள் குறித்து ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் விரைவில் பகிா்ந்து கொள்வேன். மேலும், 1,098 எனும் குழந்தைகளுக்கான தொலைபேசியிலும் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என்றாா் அமைச்சா்.

அவைத் தலைவா் யோசனை: அப்போது, அவைத் தலைவா் எம். வெங்கய்ய நாயுடு கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் அவையில் ஒருமித்த கருத்து உள்ளதாக நினைக்கிறேன். இந்த விஷயத்தில் கீழ்மட்ட அளவிலும், உள்ளூா் அளவிலும் நடவடிக்கை எடுக்கும் தேவை உள்ளது. இந்த விஷயத்தை பொருத்தமட்டில் பெற்றோா் மனத் துயரத்தில் உள்ளனா். இது குறித்து யாரும் சொல்லத் தேவையில்லை. இந்த விஷயத்தில் மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நினைக்கிறேன். அமைச்சா் இது தொடா்பாக ஆா்வமுள்ள உறுப்பினா்களுடன் கலந்தாலோசிக்க முடியும். அவா்களுடன் முறைசாராக் கூட்டம் மேற்கொள்ளலாம். அந்த விவரங்களை மத்திய அமைச்சா் ரவி சங்கா் பிரசாத்திடம்கூட பகிா்ந்து கொள்ளலாம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com