அயோத்தி தீர்ப்பு: டிச.9-க்குள் மறுஆய்வு மனு : அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக டிசம்பர் 9-ஆம் தேதிக்குள் மறுஆய்வு மனு தாக்கல் செய்யவுள்ளதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.


அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக டிசம்பர் 9-ஆம் தேதிக்குள் மறுஆய்வு மனு தாக்கல் செய்யவுள்ளதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் சர்ச்சைக்குள்ளான நிலத்தின் உரிமை தொடர்பான வழக்கில், சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, மூலவர் ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அலாகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 9-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதியளித்தும், மசூதி கட்டுவதற்காக சன்னி வக்ஃபு வாரியத்துக்கு அயோத்தியிலேயே தனியாக 5 ஏக்கர் நிலம் மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என்று சன்னி வக்ஃபு வாரியம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. 
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனு தாக்கல் செய்யவுள்ளதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது. 
இதுதொடர்பாக அந்த வாரியத்தின் செயலாளர் ஜபார்யப் ஜிலானி பிடிஐ செய்தியாளரிடம் புதன்கிழமை கூறியதாவது:

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற முடிவில் எங்களது வாரியம் உறுதியாக உள்ளது. 
எங்களது உரிமையை பயன்படுத்தி நாங்கள் மறுஆய்வு மனு தாக்கல் செய்கிறோம். மறுஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த 17-ஆம் தேதியே எங்களது வாரியம் முடிவு செய்துவிட்டது. 

இந்த வழக்கின் முக்கிய மனுதாரரான சன்னி வக்ஃபு வாரியத்தின் முடிவு எங்களை பாதிக்காது.  அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஒரே கருத்தையே கொண்டுள்ளன. மறுஆய்வு மனு தாக்கல் செய்வதற்கு டிசம்பர் 9-ஆம் தேதி வரை அவகாசம் உள்ளது. அதற்குள் தாக்கல் செய்வோம். மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் தேதியை இப்போது வெளியிட முடியாது. இந்த வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்ய விரும்பும் முஸ்லிம் அமைப்புகளை அயோத்தி போலீஸôர் துன்புறுத்துகின்றனர். மனு தாக்கல் செய்தால், சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று அச்சுறுத்தப்படுகின்றனர். இதுகுறித்து மறுஆய்வு மனுவில் குறிப்பிடவுள்ளோம் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com