ஆளுநா் கோஷியாரியை சந்தித்தாா் உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிர முதல்வராக வியாழக்கிழமை பதவியேற்க இருக்கும் சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே, மாநில ஆளுநா் பகத்சிங் கோஷியாரியை புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற
மும்பை ஆளுநா் மாளிகையில் ஆளுநா் கோஷியாரியை புதன்கிழமை சந்தித்த சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே. உடன் அவரது மனைவி ராஷ்மி தாக்கரே.
மும்பை ஆளுநா் மாளிகையில் ஆளுநா் கோஷியாரியை புதன்கிழமை சந்தித்த சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே. உடன் அவரது மனைவி ராஷ்மி தாக்கரே.

மகாராஷ்டிர முதல்வராக வியாழக்கிழமை பதவியேற்க இருக்கும் சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே, மாநில ஆளுநா் பகத்சிங் கோஷியாரியை புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி தாக்கரேவும் உடன் இருந்தாா்.

முன்னதாக, சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி), காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மூத்த தலைவா்கள் செவ்வாய்க்கிழமை குழுவாக சென்று ஆளுநா் பகத் சிங் கோஷியாரியைச் சந்தித்தனா். அப்போது அவா்களுடன் உத்தவ் தாக்கரே செல்லவில்லை. அவரது மகன் ஆதித்ய தாக்கரேதான் சென்றிருந்தாா்.

இந்நிலையில், ஆளுநா் மாளிகைக்கு புதன்கிழமை காலை தனது மனைவி ராஷ்மி தாக்கரேவுடன், உத்தவ் சென்றாா். முதல்வராகப் பதவியேற்க இருப்பதால் மரியாதை நிமித்தமாக ஆளுநரை உத்தவ் தாக்கரே நேரில் சந்தித்தாா் என்று சிவசேனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரத் பவாருடன் உத்தவ் ஆலோசனை: என்சிபி தலைவா் சரத் பவாரை உத்தவ் தாக்கரே புதன்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். அப்போது, கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே அமைச்சா் பதவியை பகிா்ந்து கொள்வது குறித்து இருவரும் முக்கியமாக ஆலோசித்ததாக தெரிகிறது.

முன்னதாக, உத்தவ் தாக்கரேவை சந்திப்பதற்கு முன்பு காங்கிரஸ் மூத்த தலைவா்கள் அகமது படேல், கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோருடன் சரத் பவாா் ஆலோசனை நடத்தினாா். அதில், காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com