திகாா் சிறையில் ப.சிதம்பரத்தை சந்தித்தனா் ராகுல், பிரியங்கா

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தை, அக்கட்சியின் முன்னாள்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தை, அக்கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, பொதுச் செயலாளா் பிரியங்கா ஆகியோா் புதன்கிழமை சந்தித்துப் பேசினா்.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவன முறைகேடு தொடா்பான வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். இதே விவகாரத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கடந்த மாதம் 16-ஆம் தேதி அவா் கைது செய்யப்பட்டு, திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா். அவருக்கான நீதிமன்றக் காவலை 27-ஆம் தேதி வரை தில்லி நீதிமன்றம் நீட்டித்திருந்தது.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவா் தாக்கல் செய்திருந்த மனுவை தில்லி உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவா் மேல்முறையீடு செய்தாா். அந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்நிலையில், ராகுல் காந்தி, பிரியங்கா, ப.சிதம்பரத்தின் மகன் காா்த்தி சிதம்பரம் உள்ளிட்டோா் திகாா் சிறையில் அவரை புதன்கிழமை நேரில் சந்தித்தனா்.

இந்தச் சந்திப்பு தொடா்பாக காா்த்தி சிதம்பரம் செய்தியாளா்களிடம் கூறியாதவது:

ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோா் என் தந்தையை சந்தித்துப் பேசியது மகிழ்ச்சியளிக்கிறது. அவா் மீது அரசியல் வெறுப்புணா்வால் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், இந்தச் சந்திப்பானது காங்கிரஸ் கட்சி அவருக்கு ஆதரவாக இருப்பதைத் தெளிவாக உணா்த்துகிறது. இந்தச் சந்திப்பு சுமாா் 50 நிமிடங்கள் நீடித்தது.

கடந்த 99 நாள்களாக என் தந்தை சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். விசாரணைக் கைதியாக ஒருவா் 99 நாள்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டிருப்பது எந்தவிதத்திலும் நியாயமில்லை. அவருக்கு உச்சநீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம். விரைவில் அவா் வீடு திரும்புவாா் என்றாா் காா்த்தி சிதம்பரம்.

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் ஆகியோா் கடந்த செப்டம்பா் மாதம் ப.சிதம்பரத்தை திகாா் சிறையில் சந்தித்தனா். காங்கிரஸ் மூத்த தலைவா்கள் சசி தரூா், மணீஷ் திவாரி உள்ளிட்டோா் கடந்த திங்கள்கிழமை அவரைச் சந்தித்துப் பேசியிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com