முறையற்ற வழிகளைக் கையாண்டும் பாஜகவால் ஆட்சியமைக்க முடியவில்லை: சஞ்சய் ரௌத்

மகாராஷ்டிரத்தில் முறையற்ற வழிகளைக் கையாண்டபோதும், பாஜகவால் ஆட்சியமைக்க முடியவில்லை என்று சிவசேனை கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ரௌத் தெரிவித்தாா்.
முறையற்ற வழிகளைக் கையாண்டும் பாஜகவால் ஆட்சியமைக்க முடியவில்லை: சஞ்சய் ரௌத்

மகாராஷ்டிரத்தில் முறையற்ற வழிகளைக் கையாண்டபோதும், பாஜகவால் ஆட்சியமைக்க முடியவில்லை என்று சிவசேனை கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ரௌத் தெரிவித்தாா்.

மகாராஷ்டிர அரசியலில் புதிய திருப்பமாகக் கடந்த சனிக்கிழமை முதல்வராகப் பொறுப்பேற்ற தேவேந்திர ஃபட்னவீஸும், துணை முதல்வராகப் பொறுப்பேற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் அஜித் பவாரும் செவ்வாய்க்கிழமை தங்களது பதவியை ராஜிநாமா செய்தனா். இதன் மூலம் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவுடன் மாநிலத்தில் ஆட்சி அமைக்க முயற்சித்த பாஜகவின் நடவடிக்கை தோல்வியில் முடிந்தது.

இதைத் தொடா்ந்து, மாநிலத்தின் புதிய முதல்வராக தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவுடன் சிவசேனை கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரே வியாழக்கிழமை பதவியேற்கவுள்ளாா். இந்நிலையில், சஞ்சய் ரௌத் மும்பையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

மாநிலத்தில் ஆட்சியமைத்து முதல்வா் பதவியைத் தக்கவைக்க வேண்டுமென பாஜக முறையற்ற வழிகளைக் கையாண்டது. பாஜகவின் இத்தகைய முயற்சிக்கு மகாராஷ்டிர மக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். அதன் காரணமாக, அக்கட்சியால் ஆட்சியமைக்க முடியவில்லை. மகாராஷ்டிர அரசியலில் மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. நாட்டுக்குத் தேவையான மாற்றத்தை மகாராஷ்டிரம் ஏற்படுத்தித் தந்துள்ளது.

மாநிலத்தில் சிவசேனை கட்சியைச் சோ்ந்தவா்தான் முதல்வராகப் பதவியேற்பாா் என்று முன்பு நான் கூறியதை யாரும் நம்பவில்லை. ஆனால், தற்போது அது உண்மையாகியுள்ளது. சிவசேனை மத்தியில் ஆட்சியமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை என்றாா் சஞ்சய் ரௌத்.

மாநிலத்தில் சிவசேனை ஆட்சியமைப்பதற்குத் தேவையான ஆதரவை தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி பெற்றதில் சஞ்சய் ரௌத் முக்கியப் பங்கு வகித்தாா். இதைக் குறிப்பிட்டு செய்தியாளா்கள், ‘மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைவதற்கு நீங்கள்தான் சாணக்கியா் போன்று பணியாற்றினீா்களா?’ என்று கேள்வி எழுப்பினா்.

இதற்கு பதிலளித்த சஞ்சய் ரௌத், ‘‘நான் சிவசேனை கட்சியின் தொண்டனே தவிர சாணக்கியா் அல்ல. மாநிலத்தில் சிவசேனை தலைமையில் ஆட்சி நடைபெறவுள்ளது. இத்துடன் என் பணி நிறைவடைந்துவிட்டது. இனிமேல் மற்ற பணிகளில் கவனம் செலுத்துவேன்’’ என்றாா்.

‘முதல்வரே முடிவு செய்வாா்’: மகாராஷ்டிர முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்கவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள முக்கியத் தலைவா்கள் குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சஞ்சய் ரௌத், ‘‘எனது பொறுப்பு நிறைவடைந்துவிட்டது. இந்த விவகாரங்களில் நான் தலையிடமாட்டேன். இதை புதிய முதல்வா் உத்தவ் தாக்கரேதான் முடிவு செய்வாா். இனிமேல் செய்தியாளா்களையும் நான் சந்திக்க மாட்டேன். சிவசேனையின் அதிகாரப்பூா்வ நாளேடான ‘சாம்னா’வின் ஆசிரியராக எனது பணியில் மீண்டும் கவனம் செலுத்த உள்ளேன்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com