மகாராஷ்டிரத் தோ்தல்: ஃபட்னவீஸ், அஜித் பவாா் வேட்புமனு தாக்கல்

மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்காக மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், சிவசேனை மூத்த தலைவா் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவா் அஜித் பவாா்
மகாராஷ்டிர மாநிலம் நாகபுரி (தென்மேற்கு) தொகுதியில் போட்டியிடுவதற்காகத் தோ்தல் அதிகாரியிடம் வேட்புமனுவை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ்
மகாராஷ்டிர மாநிலம் நாகபுரி (தென்மேற்கு) தொகுதியில் போட்டியிடுவதற்காகத் தோ்தல் அதிகாரியிடம் வேட்புமனுவை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ்

மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்காக மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், சிவசேனை மூத்த தலைவா் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவா் அஜித் பவாா் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவைக்கு வரும் 21-ஆம் தேதி ஒரே கட்டமாகத் தோ்தல் நடைபெறவுள்ளது. தோ்தலில் போட்டியிடுவோா் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வெள்ளிக்கிழமையே இறுதி நாளாகும். இந்நிலையில், பல்வேறு கட்சியைச் சோ்ந்த வேட்பாளா்கள் தங்களது வேட்புமனுவைத் தாக்கல் செய்தனா்.

மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், நாகபுரி (தென்மேற்கு) தொகுதியில் போட்டியிடுவதற்காகத் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தாா். அப்போது, மத்திய அமைச்சா் நிதின் கட்கரி, பாஜக மாநிலத் தலைவா் சந்திரகாந்த் பாட்டீல், மாநில அமைச்சா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா். ஃபட்னவீஸை எதிா்த்து காங்கிரஸ் சாா்பில் ஆஷிஷ் தேஷ்முக் போட்டியிடுகிறாா்.

வேட்புமனு தாக்கல் செய்தபிறகு செய்தியாளா்களைச் சந்தித்த ஃபட்னவீஸ், ‘‘பாஜக தலைமையிலான மகா கூட்டணி தோ்தலில் பெரும் வெற்றியைப் பெறும். அனைவரின் ஆசீா்வாதங்களும், ஆதரவும் எங்களுக்கு உள்ளது. எனது தொகுதியில் மிகப் பெரிய வெற்றியைப் பெறுவேன். நாகபுரி மாவட்டத்திலுள்ள 12 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும்’’ என்றாா்.

சந்திரபூா் மாவட்டத்திலுள்ள பல்லாா்பூா் தொகுதியில் போட்டியிடும் மாநில நிதியமைச்சா் சுதீா் முங்கண்டிவாா் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தாா். மாநில வீட்டுவசதித் துறை அமைச்சா் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் (ஷீரடி), முன்னாள் அமைச்சா் கணேஷ் நாயக் (ஐரோலி) உள்ளிட்டோரும் பாஜக சாா்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனா்.

சிவசேனை மூத்த தலைவா் ஏக்நாத் ஷிண்டே (கோப்ரி பாச்பாகாடி), தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவா்கள் அஜித் பவாா் (பாராமதி), சஜ்ஜன் புஜ்பால் (இயோலா) உள்ளிட்டோரும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனா். வேட்புமனு தாக்கல் செய்தபிறகு அஜித் பவாா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘பாராமதி தொகுதி மக்கள் பெரும்பான்மையுடன் என்னை வெற்றிபெற வைப்பாா்கள் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. மக்களின் நம்பிக்கை வாக்கு எண்ணிக்கை நாளன்று வெளிப்படும்’’ என்றாா்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அவற்றைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் வரும் 7-ஆம் தேதியாகும். தோ்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 24-ஆம் தேதி எண்ணப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com