ஆரே காலனியில் மரங்களை வெட்டக் கூடாது: உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் மெட்ரோ ரயில்நிலையத்துக்கான கட்டுமானத்துக்காக ஆரே காலனியில் மரங்களை வெட்டக் கூடாது என்று  உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆரே காலனியில் மரங்களை வெட்டக் கூடாது: உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் மெட்ரோ ரயில்நிலையத்துக்கான கட்டுமானத்துக்காக ஆரே காலனியில் மரங்களை வெட்டக் கூடாது என்று  உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் ஆரே காலனி பகுதியில் மெட்ரோ ரயில் பணிமனை கட்டுமானத்துக்காக மரங்கள் வெட்டப்படும் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய உச்சநீதிமன்ற சிறப்பு அமர்வு இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

தற்போதைக்கு எந்த மரத்தையும் வெட்டக் கூடாது என்று நீதிபதிகள் உறுதிபடக் கூறிவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை அக்டோபர் 21ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

முன்னதாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த நொய்டாவைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர்கள் சிலர், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, அந்த சட்டக் கல்லூரி மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், அந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரிப்பதாகத் தெரிவித்தது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் வரும் 12-ஆம் தேதி வரை தசரா விடுமுறையில் இருப்பதால், இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க சிறப்பு அமர்வு ஏற்படுத்தப்படுவதாகவும், அந்த அமர்வு திங்கள்கிழமை (அக். 7) விசாரணை நடத்தும் என்றும் உச்சநீதிமன்ற இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 ஆரே காலனி, ஏராளமான மரங்களைக் கொண்ட வனம் போன்ற பகுதியாகும். அங்கு மெட்ரோ ரயில் பணிமனை அமைக்க முடிவு செய்யப்பட்டதை அடுத்து, அந்தப் பகுதியில் இருக்கும் 2,656 மரங்களை வெட்ட மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பை உயர்நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், அந்த மனுக்களை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, ஆரே காலனி பகுதியில் மரங்களை வெட்டும் பணியை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெள்ளிக்கிழமை இரவே தொடங்கியது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் தாங்கள் உச்சநீதிமன்றத்தை நாட இருப்பதாகவும், அதனால் மரங்களை வெட்டுவதற்கு ஒரு வார காலத்துக்கு தடை விதிக்கக் கோரியும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் மும்பை உயர்நீதிமன்றத்தில் சனிக்கிழமை புதிய மனு தாக்கல் செய்தனர்.

ஆனால் அந்த மனுவையும் மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இச்சூழலில் இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை விசாரிக்கிறது.

பிரகாஷ் அம்பேத்கர் கைது: இதனிடையே, ஆரே காலனி பகுதியில் மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தக் காலனிக்குள் நுழைய முயன்ற தலித் தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

முன்னதாக, அந்தப் பகுதியில் போலீஸார் சனிக்கிழமை 144 தடையுத்தரவு பிறப்பித்தனர். இந்நிலையில், வஞ்சித் பகுஜன் அகாதி கட்சியின் தலைவரான பிரகாஷ் அம்பேத்கர், ஆரே காலனிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தார்.

காலனிக்குள் நுழைய முயன்ற அவரை கைது செய்த போலீஸார், சில மணி நேரங்களுக்குப் பிறகு விடுவித்தனர். அதன் பிறகு பிரகாஷ் அம்பேத்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மரங்கள் அடர்ந்த ஆரே பகுதி, மும்பை நகரின் காற்றை சுத்தப்படுத்த உதவுகிறது. அப்பகுதியில் இருக்கும் மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்போரின் குரலை மகாராஷ்டிர அரசு பலம் கொண்டு அடக்குகிறது.

மகாராஷ்டிரத்தில் நாங்கள் ஆட்சிக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டாலும் கூட, மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவிப்போருக்கு ஆதரவாக வஞ்சித் பகுஜன் அகாதி கட்சி துணை நிற்கும். இதுவரை ஆரே காலனி பகுதியில் சுமார் 700 மரங்கள் வெட்டப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று பிரகாஷ் அம்பேத்கர் கூறினார்.

நிபந்தனை ஜாமீன்: ஆரே காலனியில் மரங்கள் வெட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவகாரத்தில் கடந்த 2 நாள்களில் கைது செய்யப்பட்ட 29 பேர் நிபந்தனை ஜாமீனில் ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.

முன்னதாக, போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், தாக்கியதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஹெச்.சி. ஷென்டே முன் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். ரூ.7,000 மதிப்பிலான சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவர்கள், மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டனர். மேலும், 15 நாள்களுக்கு ஒருமுறை காவல் நிலையத்தில் ஆஜராகவும், விசாரணைக்கு ஒத்துழைக்கவும் நீதிபதி அவர்களை அறிவுறுத்தினார்.

ஜாவடேகர் விளக்கம்: இந்நிலையில், ஆரே காலனி விவகாரம் குறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறுகையில், "ஆரே காலனி வனப்பகுதி அல்ல என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வனப்பகுதியில் உள்ள மரங்களைத்தான் வெட்டக் கூடாது.

தில்லியில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்பட்டபோதும் இதுபோன்று மரங்கள் வெட்டப்பட்டன. ஆனால், வெட்டப்பட்ட ஒவ்வொரு மரத்துக்கும் பதிலாக 5 மரங்கள் நடப்பட்டன. இது சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய வளர்ச்சியாகும்' என்றார்.

"24,000 மரங்கள் நடப்பட்டன': இதனிடையே, ஆரே மில்க் காலனி உள்பட மும்பை நகர் முழுவதுமாக கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 24,000 மரங்களை நட்டு வைத்ததாக மும்பை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. "புதிய உருவாக்கங்களுக்கு சில அழிவுகளை தவிர்க்க இயலாது' என்று அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அஷ்வினி பிடே கூறியிருந்த நிலையில், இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com