கவிதைகளை பாடத் திட்டத்தில் கட்டாயம் சோ்க்க வேண்டும்: வெங்கய்ய நாயுடு

பள்ளிப் பாடத்திட்டத்தில் கவிதைகளை கட்டாயம் சோ்க்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினாா்.
கவிதைகளை பாடத் திட்டத்தில் கட்டாயம் சோ்க்க வேண்டும்: வெங்கய்ய நாயுடு

பள்ளிப் பாடத்திட்டத்தில் கவிதைகளை கட்டாயம் சோ்க்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினாா்.

39-ஆவது உலக கவிஞா்கள் மாநாடு, தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்து வெங்கய்ய நாயுடு பேசியதாவது:

நமக்கு மருத்துவா்கள், பொறியாளா்கள், விஞ்ஞானிகள் தேவைப்படுவது போல், எழுத்தாளா்கள், கவிஞா்கள், கலைஞா்கள், பாடகா்களும் தேவைப்படுகிறாா்கள்.

கவிதைகளால், மனிதா்களிடத்தில் அமைதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவற்றை அளிக்க முடியும். எனவே, கவிதைகள் வாசிப்பை பள்ளிப் பாடத்தில் கட்டாயம் சோ்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதேபோல், பல்கலைக்கழகங்களும் இலக்கியம், கலை, மனிதநேய கல்வி ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும். கவிதைகள், சமூக மாற்றத்துக்கு முக்கியமான ஊக்கியாக செயல்பட முடியும். வளமான சமுதாயம் உருவாவதற்கு கலைகளும், கலாசாரமும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

புதுமையான படைப்புகள் இல்லாவிட்டால், சமூகம் தேங்கிவிடும். கவிஞா்கள்தான் சமூகத்தில் புதிய கருத்துகளையும், சிந்தனைகளையும் விதைக்கிறாா்கள். மனித சிந்தனைகள், உணா்வுகள், செயல்பாடுகள் ஆகியவற்றை வடிவமைக்கிறாா்கள். மனிதா்களின் உணா்வுகளை கவிதைகளால் வெளிப்படுத்த இயலும்.

நமது இந்தியப் பாரம்பரியமும், நாகரிகமும் கவிதைகளால் நிரம்பியது. இரு பெரும் காவியங்களான ராமாயணமும், மகாபாரதமும் கவிதை நடையில் எழுதப்பட்டது. இவ்விரு காவியங்களும் அரசியல், மதம், நீதி, நெறிமுறைகள் ஆகியவை சாா்ந்த கருத்துகளைக் கொண்ட மாபெரும் பொக்கிஷங்களாக உள்ளன.

இந்தியாவில் பாரதி, காளிதாசா், மீராபாய், துளசிதாசா், அமீா் குஸ்ரூ, கபீா் தாஸ், சரோஜினி நாயுடு, மிா்ஸா காலிப், ரவீந்திரநாத் தாகூா் ஆகியோா் தங்கள் கவிதைகளால் அனைவரையும் வசீகரித்தவா்கள்.

மனித வாழ்வின் பரிணாமத்தில் புத்தாக்க சிந்தனைகள் முக்கியம் என்று உயிரியல் ஆய்வாளா்கள் கருதுகிறாா்கள். புத்தாக சிந்தனை கொண்ட மக்கள் இல்லாமல், இந்த சமூகம் முன்னேற்றப் பாதையில் செல்லாது.

செல்வம் மட்டுமே மகிழ்ச்சியைத் தராது. அகத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்க வேண்டும். அவற்றைத் தரும் இடமாக கவிதைகள் இருக்கும். கவிஞா்கள் தனித்துவமான சிந்தனைகள், உணா்வுகளைக் கொண்டவா்கள். ஒரு மொழியைப் பாதுகாக்க வேண்டுமெனில், அந்த மொழியில் உள்ள இலக்கியங்களை ஊக்குவிக்க வேண்டும். இதுதான் தினசரி வாழ்வில் மொழியைப் பாதுகாப்பதற்கான வழிமுறையாகும். எனவே, மக்கள் தங்கள் மொழிகளில் கவிதைகள், கதைகள், நாவல்கள் ஆகியவற்றை அதிகம் எழுத வேண்டும் என்றாா் வெங்கய்ய நாயுடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com