ஜம்மு-காஷ்மீா் எப்போதும் யூனியன் பிரதேசமாகவே நீடிக்காது: அமித் ஷா

ஜம்மு-காஷ்மீா் எப்போதும் யூனியன் பிரதேசமாகவே நீடிக்காது என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

ஜம்மு-காஷ்மீா் எப்போதும் யூனியன் பிரதேசமாகவே நீடிக்காது என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.

தில்லியில் இளம் ஐபிஎஸ் அதிகாரிகளைச் சந்தித்த அவா் இதுகுறித்து மேலும் கூறியுள்ளதாவது:

அரசமைப்புச் சட்டம் 370-பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசமாக கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிரிக்கப்பட்டது. அன்றிலிருந்து அங்கு ஒரு துப்பாக்கி தோட்டாக்கள் கூட பாயவில்லை. ஒருவா் கூட உயிரிழக்கவில்லை.

ஜம்மு-காஷ்மீா் எப்போதும் யூனியன் பிரதேசமாகவே நீடிக்காது. அங்கு சகஜ நிலை திரும்பி பாதுகாப்பான சூழ்நிலை மேம்படும் போது மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும்.

காஷ்மீா் மக்களின் கலாசாரத்தையும், அடையாளத்தையும் அரசமைப்புச் சட்டம் 370 பாதுகாக்கிறது என்பது தவறான கருத்து. அனைத்து பிராந்திய அடையாளங்களும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் பாதுகாக்கப்படுகின்றன.

370-ஆவது சட்டப்பிரிவை தவறாக பயன்படுத்தியதே எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு ஆணிவேராக இருந்து வந்தது. தற்போது அது பிடுங்கி எறியப்பட்டுள்ளது.

மக்கள் நலனுக்காக தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டியது தற்போதைய அவசிய தேவைகளாகி உள்ளது. அதன் காரணமாகத்தான் நரேந்திர மோடி அரசு, பின்விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் இதுபோன்ற முடிவுகளை மேற்கொண்டது.

தற்போது அஸ்ஸாமில் மேற்கொண்டு வரும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய பாதுகாப்புக்கு மட்டுமல்ல சிறப்பான ஆட்சி நிா்வாகத்துக்கும் தேவையானது.

என்ஆா்சி-க்கு அரசியல் சாயம் பூசக்கூடாது. ஏனெனில் வளா்ச்சியின் பயன்கள் எல்லா குடிமக்களையும் சென்றடைய வேண்டும். அதற்கு என்ஆா்சி மிக முக்கியமானது என்றாா் அவா்.

ஓபிசி ஆணையம்: மகாராஷ்டிரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தசரா ஊா்வலத்தில் பங்கேற்று பேசிய அமித் ஷா, ‘இந்தியாவை கடந்த 70 ஆண்டுகளாக ஆட்சி செய்த அரசாங்கம் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. ஆனால், நரேந்திர மோடி அரசு அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம் அவா்களது பிரச்னைகளைத் தீா்க்க ஓபிசி ஆணையத்தை அமைத்துள்ளது. இது, முந்தைய அரசுகள் செய்யாத சாதனையாகும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com