66 நாட்களுக்குப் பிறகு காஷ்மீரில் திறக்கப்பட்ட கல்லூரிகள்: வகுப்புகளுக்குச் செல்லாத மாணவர்கள்!

காஷ்மீரில் இன்று (புதன்கிழமை) கல்லூரிகள் திறக்கப்பட்டபோதிலும், மாணவர்கள் அனைவரும் வகுப்புகளுக்குச் செல்வதைத் தவிர்த்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


காஷ்மீரில் இன்று (புதன்கிழமை) கல்லூரிகள் திறக்கப்பட்டபோதிலும், மாணவர்கள் அனைவரும் வகுப்புகளுக்குச் செல்வதைத் தவிர்த்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்தது. இதையடுத்து, அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். சுற்றுலாப் பயணிகள் ஜம்மு-காஷ்மீரில் இருந்து வெளியேறுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது. தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால் ஜம்மு-காஷ்மீர் தொடர்பற்று இருந்தது.

இதையடுத்து, அங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, காஷ்மீரில் அக்டோபர் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், அக்டோபர் 9-ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என்று காஷ்மீர் நிர்வாகம் அறிவித்தது. இதன்படி, கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், "கல்லூரிகளில் பணிபுரிபவர்கள் பணிக்குத் திரும்பியபோதிலும், மாணவர்கள் யாரும் கல்லூரிகளுக்கு வரவில்லை" என்றனர். முன்னதாக, காஷ்மீர் நிர்வாகம் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் பள்ளிகளுக்கும் மாணவர்கள் யாரும் செல்லவில்லை.

பாதுகாப்புக் காரணம் கருதியும், காஷ்மீரில் பல்வேறு இடங்களில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாலும் குழந்தைகளை பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் அனுப்ப பெற்றோர்கள் தயக்கம் காட்டுவதாகத் தெரிகிறது. இன்றைக்கும் காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிக்கப்பட்ட நிலையிலேயே இருக்கிறது.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கடை உரிமையாளர்கள் தங்களது கடைகளை அதிகாலை திறந்து 11 மணிக்கு மூடிவிடுகின்றனர். இது சாலையோர விற்பனையாளர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. அவர்கள் தொடர்ந்து, சாலையோரம் ஸ்டால்களை அமைத்து வியாபாரம் மேற்கொள்கின்றனர். 

காஷ்மீரில் தரைவழி தொலைபேசி சேவை மட்டுமே மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் செல்போன் சேவைகளும், ஆகஸ்ட் 5 முதல் அனைத்து இணையதள சேவைகளும் இன்னும் துண்டிக்கப்பட்ட நிலையிலேயே இருக்கிறது.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து 66 நாட்களாகியும், காஷ்மீரில் இதுபோன்ற நிலை இன்னும் நீடிப்பது மிகவும் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com