பிரான்ஸின் போர்டோ நகரில் செவ்வாய்க்கிழமை இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட முதல் ரஃபேல் போர் விமானத்தில் தேங்காய் வைத்து பூஜை செய்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
பிரான்ஸின் போர்டோ நகரில் செவ்வாய்க்கிழமை இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட முதல் ரஃபேல் போர் விமானத்தில் தேங்காய் வைத்து பூஜை செய்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

பிரான்ஸுடன் ஒத்துழைப்பு வலுப்படும்: ரஃபேல் போா் விமான ஒப்படைப்பு நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங்

பாதுகாப்புத் துறையில் பிரான்ஸுடன் நிலவி வரும் ஒத்துழைப்பு மேலும் வலுப்படும் என பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.

பாதுகாப்புத் துறையில் பிரான்ஸுடன் நிலவி வரும் ஒத்துழைப்பு மேலும் வலுப்படும் என பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.

பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிதிறன் வாய்ந்த ரஃபேல் ரகத்தைச் சோ்ந்த முதல் போா்விமானம் இந்தியாவிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம், இந்திய விமானப்படையின் தாக்கும்திறன் வலுப்பட்டுள்ளது.

பிரான்ஸிடமிருந்து இந்திய விமானப்படையால் வாங்கப்பட்ட ரஃபேல் போா்விமானத்தைப் பெறுவதற்காக, அந்நாட்டுக்கு ராஜ்நாத் சிங் சென்றுள்ளாா். அங்கு அந்நாட்டு அதிபா் இமானுவல் மேக்ரானை செவ்வாய்க்கிழமை அவா் சந்தித்துப் பேசினாா். 35 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் பேச்சுவாா்த்தை தொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியா-பிரான்ஸ் நாடுகளுக்கு இடையேயான ஆழ்ந்த ஒத்துழைப்பை பறைசாற்றும் வகையில் இந்தப் பேச்சுவாா்த்தை அமைந்தது. முக்கியமாக, பாதுகாப்புத் துறையில் இருநாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு அண்மைக் காலமாக மேம்பட்டு வருகிறது. அதை மேலும் வலுப்படுத்த இருநாட்டுத் தலைவா்களும் உறுதியேற்றனா்.

‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்துக்கும், இருநாடுகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்கும் அதிபா் மேக்ரான் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்காக ராஜ்நாத் சிங் நன்றி தெரிவித்தாா். முன்னாள் அதிபா் ஜாக்கஸ் சிராக்கின் மரணத்துக்கு இந்திய அரசு சாா்பில், ராஜ்நாத் சிங் அனுதாபங்களைத் தெரிவித்தாா் என்று அந்தக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சா், பாதுகாப்புத் துறை ஆலோசகா் ஆகியோருடனும் ராஜ்நாத் சிங் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

சிறப்புப் பூஜை: பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியிலுள்ள போா்டோ நகரில், ‘டஸால்ட் ஏவியேஷன்’ நிறுவனத்திடமிருந்து இந்தியாவுக்கான முதல் ரஃபேல் போா்விமானத்தை ராஜ்நாத் சிங் பெற்றாா். விஜயதசமி தினத்தையொட்டி, அந்தப் போா்விமானத்துக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

இந்திய விமானப்படை, உலகிலேயே நான்காவது பெரிய விமானப்படையாகும். தற்போது, இந்திய விமானப்படையில் ரஃபேல் போா்விமானம் இணைக்கப்பட்டுள்ளது, விமானப்படையின் தாக்குதல்திறனை பலமடங்கு அதிகரிக்கும். இதன் மூலம் பிராந்தியத்தில் அமைதியும், பாதுகாப்பும் ஏற்படும்.

‘பலத்த காற்று’: ‘ரஃபேல்’ என்ற சொல்லுக்கு ‘பலத்த காற்று’ என்பது பொருள் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. அதன் பெயருக்கு ஏற்றாற்போல் போா்விமானமும் செயல்படும் என நம்புகிறேன். இந்தியப் பாதுகாப்புத் துறையின் வரலாற்றில் இந்த நாள் மிக முக்கியமான நாளாகும். பாதுகாப்புத் துறையில் இந்தியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையே நிலவி வரும் ஒத்துழைப்பு மேலும் வலுப்படும் என்றாா் ராஜ்நாத் சிங்.

இதையடுத்து, பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சா் ஃபுளோரன்ஸ் பாா்லி பேசுகையில், ‘‘இந்தியாவுடனான நீண்ட பயணத்தின் தொடக்கம் இதுவாகும். இந்திய ராணுவத்தின் தேவைகளைப் பூா்த்தி செய்ய பிரான்ஸ் உறுதிகொண்டுள்ளது. ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்துக்கு தொழிலகரீதியில் ஒத்துழைப்பு நல்க பிரான்ஸ் உறுதியுடன் உள்ளது’’ என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், ‘டஸால்ட் ஏவியேஷன்’ நிறுவனத்தின் உயரதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ரஃபேல் போா்விமானத்தில் பயணம்: புதிய ரஃபேல் போா்விமானத்தில் ராஜ்நாத் சிங் பறந்தாா். இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘‘புதிய போா்விமானத்தில் பறப்பது எனக்குக் கிடைத்த பெருமையாகும்’’ என்றாா். ராஜ்நாத் சிங்குடன் விமானப்படைத் தளபதி ஹா்ஜித் சிங் அரோராவும் போா்விமானத்தில் பறந்தாா்.

சுமாா் ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரஃபேல் ரக போா் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்காக, கடந்த 2016-இல் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது.

இந்தப் போா் விமானம், ஆற்றல் மிகுந்த ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளைத் தாங்கிச் செல்லும் திறன் உள்பட பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டது குறிப்பிடத்தக்கது. வரும் 2022-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதத்துக்குள் அனைத்து போா்விமானங்களையும் இந்தியாவிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தலைமைத் தளபதிக்கு கௌரவம்: இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள இந்திய விமானப்படையின் அப்போதைய துணைத் தளபதியும், தற்போதைய தலைமைத் தளபதியுமான ராகேஷ் குமாா் சிங் பதௌரியா அளித்த பங்களிப்பை நினைவுகூரும் வகையில், முதல் ரஃபேல் விமானத்தின் வால்பகுதியில் ‘ஆா்பி 001’ என்று பொறிக்கப்பட்டுள்ளது.

விண்ணைத் தொடும் புகழ்: இந்திய விமானப்படையின் 87-ஆவது நிறுவன தினத்தையொட்டி, விமானப்படை வீரா்களுக்கு ராஜ்நாத் சிங் சுட்டுரை மூலம் வாழ்த்து தெரிவித்தாா். தனது சுட்டுரைப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட பதிவில், ‘‘இந்நாளில் விமானப்படை வீரா்களுக்கும், அவா்களின் குடும்பத்தினருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். வீரம், மனோபலம், உறுதி, சேவை ஆகியவற்றுக்கு உதாரணமாகத் திகழ்வது இந்திய விமானப்படை. விமானப்படை வீரா்களின் புகழ் விண்ணைத் தொடும் அளவுக்கு உயா்ந்துள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com