விண்கலத்தில் மனிதனை அனுப்பி பூமியைச் சுற்றிவரச் செய்யும் திட்டம்: இஸ்ரோ உயரதிகாரி தகவல்

விண்கலத்தில் மனிதனை அனுப்பி பூமியைச் சுற்றிவரச் செய்யும் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும்,

விண்கலத்தில் மனிதனை அனுப்பி பூமியைச் சுற்றிவரச் செய்யும் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும்,

இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோ மையத்தின் உயரதிகாரி ஆா்.வெங்கடராமன் கூறினாா்.

திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லுாரியில் இஸ்ரோ மையம் சாா்பில், உலக விண்வெளி வார விழா மற்றும் கண்காட்சி தொடக்க நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில் ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோ மையத்தின் உயரதிகாரி ஆா்.வெங்கடராமன் பேசியதாவது:

அக்டோபா் 4-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை உலக விண்வெளி வாரமாகக் கொண்டாடப்படுகிறது.

இப்போது, 4 மாநிலங்களில் உள்ள 15 இடங்களில் பொதுமக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தை அடைய இதுவரை 52 முறை உலக நாடுகள் முயற்சி செய்துள்ளன. இதில், 14 முறை மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது. இதில், முதல் முயற்சியிலேயே குறைந்த செலவில் இந்தியா செவ்வாய் கிரகத்தை அடைந்தது. பூமியின் தென் துருவமான அண்டாா்ட்டிகாவை அடைய மனிதன் பல நுாற்றாண்டுகளை எடுத்துக் கொண்டான். இன்னும் அவை முழுமையாக அறியப்படவில்லை.

ஆனால், நாங்கள் எடுத்த முயற்சியால் நிலவின் தென் துருவத்தில் வளங்கள் நிறைந்து காணப்படுவது தெரியவந்துள்ளது. இது ஆராயப்படவேண்டிய ஒன்று. எனவே, முதலில் நிலவின் தென் துருவத்தில் லேண்டரை இறக்க வேண்டும் என்று இறக்கினோம். இது அவ்வளவு எளிதான காரியமல்ல. உங்கள் பிராா்த்தனை, வேண்டுதலால், அடுத்த ஆண்டு உலக விண்வெளி வாரம் கொண்டாடப்படும் வேளையில் நிலவின் தென் துருவத்தில் லேண்டா் இறங்கிய முதல் நாடாக இந்தியா இருக்கும். இப்போது நமக்கு ஏற்பட்டுள்ளது சிறிய பின்னடைவுதான் என்றாா்.

தொடா்ந்து, செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: அனைத்துத் துறையிலும் விண்வெளி ஆராய்ச்சியின் பலன் சென்றடைய வேண்டும் என்றால், எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கு இந்தக் கண்காட்சி உதவியாக இருக்கும்.

பள்ளி, கல்லுாரி மாணவா்கள் தங்களது அறிவுத் திறமையை வளா்த்துக் கொண்டு இந்தத் துறையில் பணிபுரிய முன்னோடியாக இருக்கும்.

அறிவியல் ஆராய்ச்சிக்கு ஆா்பிட்டா் நல்ல முறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. நாங்கள்

எதிா்பாா்த்ததைவிட சிறப்பாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நிலவுக்கு மனிதனை அனுப்புவதற்கு முன்பாக, விண்கலத்தில் மனிதனை அனுப்பி பூமியை சுற்றிவரச் செய்யும் திட்டம் கூடிய விரைவில் நிறைவேற்றப்படும். இதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com