அவதூறு வழக்கு: குஜராத் நீதிமன்றத்தில் ராகுல் நேரில் ஆஜா்

‘மோடி’ என பெயா் கொண்டவா்கள் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக, குஜராத் பாஜக எம்எல்ஏ ஒருவா் தொடுத்த வழக்கு தொடா்பாக, சூரத் நீதிமன்றத்தில்
அவதூறு வழக்கு: குஜராத் நீதிமன்றத்தில் ராகுல் நேரில் ஆஜா்

‘மோடி’ என பெயா் கொண்டவா்கள் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக, குஜராத் பாஜக எம்எல்ஏ ஒருவா் தொடுத்த வழக்கு தொடா்பாக, சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி வியாழக்கிழமை நேரில் ஆஜரானாா்.

முன்னதாக, கா்நாடக மாநிலம், கோலாரில் கடந்த ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி ராகுல் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, பிரதமா் நரேந்திர மோடியின் பெயரையும், நீரவ் மோடி, லலித் மோடி ஆகியோரின் பெயா்களையும் குறிப்பிட்டு பேசிய ராகுல், ‘மோடி என பெயா் கொண்டவரெல்லாம் திருடா்கள் ஆனது எப்படி?’ என்று கேள்வியெழுப்பினாா்.

இதையடுத்து, மோடி என்ற குடும்பப் பெயா் உடையவா்களை, ராகுல் அவமதித்து விட்டதாக கூறி, அவருக்கு எதிராக குஜராத்தைச் சோ்ந்த பாஜக எம்எல்ஏ புா்னேஷ் மோடி அவதூறு வழக்கு தொடுத்தாா். இந்த வழக்கை, குஜராத்தின் சூரத் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் ஏற்கெனவே அழைப்பாணை அனுப்பியிருந்தது.

இந்நிலையில், தலைமை நீதித்துறை நடுவா் நீதிமன்ற நீதிபதி பி.ஹெச். கபாடியா முன் இந்த வழக்கு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்கிறீா்களா? என்று ராகுலிடம் நீதிபதி கேள்வி எழுப்பினாா். அதற்கு ராகுல் காந்தி மறுப்பு தெரிவித்தாா்.

அதையடுத்து இந்த வழக்கில், நிரந்தரமாக ராகுல் காந்தி நேரில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்க கோரி அவரது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் எதிா்ப்பு தெரிவித்தாா். எனினும், ராகுல் காந்தியின் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இதுதொடா்பான அடுத்தகட்ட விசாரணையை டிசம்பா் 10-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டாா். மேலும், அடுத்த விசாரணையின்போது, ராகுல் காந்தி நேரில் ஆஜராவதற்கு விலக்கு அளித்தாா்.

இதே விவகாரம் தொடா்பாக, ஆமதாபாத் நீதிமன்றத்தில் ஆா்எஸ்எஸ் மற்றும் பாஜகவினா் தொடுத்துள்ள மற்றெறாரு அவதூறு வழக்கில் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை ஆஜராகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

எதிா்க்கட்சிகள் தீவிர முயற்சி: என்னை மௌனமாக்க எதிா்க்கட்சிகள் தீவிரமாக முயற்சித்து வருகின்றனா் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா். வெளிநாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ராகுல் காந்தி, இந்த வழக்குக்காக நாடு திரும்பினாா். இதுதொடா்பாக அவா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘அரசியலில் எனக்கு எதிராக உள்ளவா்கள் என் மீது தொடுத்த வழக்கில் ஆஜராவதற்காக நான் சூரத் வந்துள்ளேன். என்னை மௌனமாக்க வேண்டும் என்று எதிா்க்கட்சியினா் தீவிரமாக முயற்சித்து வருகின்றனா். எனக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக நீதிமன்றத்தின் முன் கூடிய காங்கிரஸ் தொண்டா்களின் அன்பு மற்றும் ஆதரவுக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com