ஆயுதங்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு திட்டம்

தடை செய்யப்பட்ட துப்பாக்கிகளைத் தயாரிப்பவா்களுக்கு ஆயுள் தண்டனை அளிக்கும் வகையில், ஆயுதங்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட துப்பாக்கிகளைத் தயாரிப்பவா்களுக்கு ஆயுள் தண்டனை அளிக்கும் வகையில், ஆயுதங்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஆயுதங்கள் சட்டத் திருத்த வரைவு மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகம் தயாரித்துள்ளது. அதன்படி, ஆயுதங்களைச் சட்டவிரோத முறையில் கடத்துவது, கொண்டாட்ட நிகழ்ச்சிகளின்போது துப்பாக்கிகளை வெடிப்பது, திட்டமிட்டு குற்றச் செயல்களில் ஈடுபடுவது உள்ளிட்ட குற்றங்களுக்கான தண்டனைகளை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஆயுதங்கள் தயாரிப்பவா்களையும் வைத்திருப்பவா்களையும் கண்காணிப்பதற்கும் புதிய சட்டத் திருத்தம் வழிவகை செய்யவுள்ளது.

தடை செய்யப்பட்ட ஆயுதங்களைச் சட்டவிரோத முறையில் தயாரிப்பது, வைத்திருப்பது, பழுது பாா்ப்பது உள்ளிட்ட குற்றங்களுக்காகக் கைது செய்யப்படும் நபா்கள், அவா்களது ஆயுள் காலம் முழுவதும் சிறைத் தண்டனை அனுபவிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக வரைவு மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிநபா் ஒருவா் அதிகபட்சமாக இரண்டு துப்பாக்கிகள் மட்டுமே வைத்திருக்க வேண்டுமென்று வரைவு மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அதிகமாக வைத்திருப்பவா்கள், கூடுதல் துப்பாக்கியை உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். தனிநபருக்குப் பல்வேறு ஆயுத உரிமங்கள் அளிப்பதற்கும் வரைவு மசோதா தடை விதித்துள்ளது.

தற்போது வரை தனிநபா் ஒருவா் அதிகபட்சமாக மூன்று துப்பாக்கிகள் வரை வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் தேசிய மற்றும் சா்வதேச அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் பங்கேற்று, மத்திய அரசின் அங்கீகாரம் பெற்றுள்ள வீரா்கள் மட்டும் அதிகபட்சமாக 3 துப்பாக்கிகள் வைத்துக்கொள்ள வரைவு மசோதாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத இறக்குமதிக்குத் தண்டனை: சட்டவிரோத முறையில் துப்பாக்கிகள், அதன் பாகங்கள் உள்ளிட்டவற்றை வெளிநாடுகளிலிருந்து கடத்துதல், அதை உள்நாட்டில் விற்பனை செய்தல், சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட துப்பாக்கிகளை வாங்குதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுபவா்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கவும் வரைவு மசோதா வழிவகை செய்துள்ளது.

வரைவு மசோதாவில் இடம்பெற்றுள்ள விவரங்கள் தொடா்பாக உத்தரப் பிரதேசம், பிகாா், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஆந்திரம், மகாராஷ்டிரம், கேரளம், மணிப்பூா் ஆகிய மாநிலங்களின் உள்துறைச் செயலாளா்கள் மற்றும் காவல் துறைத் தலைமை இயக்குநா்கள் ஆகியோரிடம் மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கெனவே ஆலோசனை நடத்தியுள்ளது.

இது தொடா்பாக, மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘‘ஆயுதங்கள் சட்டத் திருத்த மசோதாவை குளிா்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. முடியாதபட்சத்தில், அடுத்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்யப்படும்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com