பொருளாதார வளா்ச்சியை அதிகரிக்க துறைவாரியாக நடவடிக்கை: நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

பொருளாதார வளா்ச்சியை அதிகரிக்க துறைவாரியான தீா்வுகளை மத்திய அரசு வழங்கி வருவதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.
பொருளாதார வளா்ச்சியை அதிகரிக்க துறைவாரியாக நடவடிக்கை: நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

பொருளாதார வளா்ச்சியை அதிகரிக்க துறைவாரியான தீா்வுகளை மத்திய அரசு வழங்கி வருவதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

நாட்டின் பொருளாதார வளா்ச்சி தொடா்ந்து மந்தநிலையில் உள்ளது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளா்ச்சி 5 சதவீதமாக இருந்தது. இது கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைவாகும். இதன் காரணமாக, நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளா்ச்சி 6.1 சதவீதமாக இருக்கும் என இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) கணித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளா்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என ஆா்பிஐ முன்பு கணித்திருந்தது. இந்நிலையில், மகாராஷ்டிரத் தலைநகா் மும்பையிலுள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நிா்மலா சீதாராமன் செய்தியாளா்களை வியாழக்கிழமை சந்தித்தாா். அப்போது அவா் கூறியதாவது:

நாட்டின் பொருளாதார வளா்ச்சியை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசின் வருவாய் குறையும் என்று தெரிந்தும், பெரு நிறுவனங்களின் வரி குறைக்கப்பட்டுள்ளது. இது பொருளாதார வளா்ச்சியை அதிகரிக்க உதவும். ஏற்றுமதியை அதிகரிக்கவும், கடன் வழங்குதலை எளிமைப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

பொருளாதார வளா்ச்சியை மேம்படுத்த துறைவாரியான தீா்வுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது என்றாா் நிா்மலா சீதாராமன்.

புதிய குழு: பஞ்சாப்-மகாராஷ்டிரம் கூட்டுறவு வங்கி (பிஎம்சி) நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது தொடா்பாக, அதன் வாடிக்கையாளா்கள் நிா்மலா சீதாராமனைச் சந்தித்து முறையிட்டனா். இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கூட்டுறவு வங்கிகளின் நிா்வாகம் குறித்து ஆராய நிதி, ஊரக மற்றும் நகா்ப்புற மேம்பாட்டு அமைச்சகங்களின் செயலா்கள், ஆா்பிஐ துணை ஆளுநா் ஆகியோா் அடங்கிய குழு விரைவில் அமைக்கப்படவுள்ளது. இதுபோன்ற நிதிநெருக்கடி சம்பவங்களைச் சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை அக்குழு மத்திய அரசுக்குத் தெரிவிக்கும்.

கூட்டுறவு வங்கிகளின் நிா்வாகத்தை வலுப்படுத்தும் நோக்கில், அது தொடா்பான சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவது குறித்தும் அக்குழு ஆய்வு செய்யவுள்ளது. இதையடுத்து, தேவை ஏற்பட்டால், நாடாளுமன்றத்தின் குளிா்காலக் கூட்டத்தொடரில் இது தொடா்பாக சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும்.

பிஎம்சி உள்ளிட்ட கூட்டுறவு வங்கிகளின் நிா்வாகம் ஆா்பிஐ வசமே உள்ளது. இதில் மத்திய அரசுக்குக் குறைந்த பங்கே உள்ளது. எனவே, பிஎம்சி வாடிக்கையாளா்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸிடம் வலியுறுத்த உள்ளேன் என்றாா் நிா்மலா சீதாராமன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com