பிஎஸ்என்எல் நிறுவனம் மூடப்பட வேண்டும் என அரசு விரும்பவில்லை

அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், மூடப்பட வேண்டும் என்று மத்திய நிதியமைச்சகம் விரும்பவில்லை என்று தொலைத்தொடர்புத் துறை செயலர் அன்ஷு பிரகாஷ் தெரிவித்தார். 
பிஎஸ்என்எல் நிறுவனம் மூடப்பட வேண்டும் என அரசு விரும்பவில்லை


அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், மூடப்பட வேண்டும் என்று மத்திய நிதியமைச்சகம் விரும்பவில்லை என்று தொலைத்தொடர்புத் துறை செயலர் அன்ஷு பிரகாஷ் தெரிவித்தார். 
தில்லியில் செல்லிடப்பேசிக்கான கோபுரங்கள் மற்றும் அடிப்படைக்கட்டமைப்புகளை விநியோகிக்கும் நிறுவனங்களுக்கான சங்கத்தின் (டிஏஐபிஏ) ஆண்டுப் பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தொலைத்தொடர்புத் துறைச் செயலரான அன்ஷு பிரகாஷ் அதில் பங்கேற்றுப் பேசினார். 
அப்போது, பிஎஸ்என்எல் நிறுவனத்தை மூடும் எண்ணம் மத்திய நிதியமைச்சகத்துக்கு உள்ளதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அன்ஷு பிரகாஷ், நிதியமைச்சகத்துக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை என்று பதிலளித்தார். 
நிதி நெருக்கடியில் தவித்து வரும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்த தொலைத்தொடர்புத் துறை வழங்கிய திட்ட முன்மொழிவுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அமைச்சர்கள் குழு கடந்த ஜூலை மாதம் ஒப்புதல் வழங்கியது. அந்தக் குழுவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தகவல்தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 
எனினும், அந்தத் திட்ட முன்மொழிவில் நிதியமைச்சக அதிகாரிகள் 80 ஆட்சேபங்கள் தெரிவித்தனர். பிஎஸ்என்எல் நிறுவனத்தை மூடும் நடவடிக்கை மத்திய அரசுக்கு ரூ.95,000 கோடி செலவை ஏற்படுத்தும் என்பதால், அந்த நிறுவனத்தை ரூ.74,000 கோடி செலவில் மறுசீரமைப்பு செய்யும் முன்மொழிவை தொலைத்தொடர்புத் துறை வழங்கியது. 
ஊழியர்கள் விருப்ப ஓய்வுத் திட்டத்துக்கு ரூ.29,000 கோடி, 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு ரூ.20,000 கோடி, 4ஜி சேவை மீதான மூலதன செலவுக்கு ரூ.13,000 கோடி என்ற மதிப்பில் சீரமைப்புத் திட்டம் முன்மொழியப்பட்டது. 
இதைச் செயல்படுத்தும் பட்சத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் 2024 நிதியாண்டில் லாபகரமாக செயல்படத் தொடங்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com