ராணுவத்தினரின் உயிரிழப்புக்கு 370-ஆவது பிரிவே காரணம்: காங்கிரஸ் மீது பிரதமா் தாக்கு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு மீது காங்கிரஸ் காட்டிய அதீத விருப்பத்தால் அங்கு ராணுவ வீரர்கள் பலியாகினர் என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்ச
ராணுவத்தினரின் உயிரிழப்புக்கு 370-ஆவது பிரிவே காரணம்: காங்கிரஸ் மீது பிரதமா் தாக்கு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு மீது காங்கிரஸ் காட்டிய அதீத விருப்பத்தால் அங்கு ராணுவ வீரர்கள் பலியாகினர் என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்தார்.
 காங்கிரஸ் கட்சிக்குத் துணிவிருந்தால், "மக்களவைத் தேர்தலில் மீண்டும் வென்று ஆட்சிக்கு வந்தால் சிறப்பு அந்தஸ்து ரத்து முடிவை திரும்பப் பெறுவோம்' என்று மக்களிடம் வாக்குறுதி அளிக்கட்டும் என்றும் அவர் சவால் விடுத்தார்.
 ஹரியாணா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்குள்ள வல்லப்கர் நகரில் தனது முதல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி திங்கள்கிழமை உரையாற்றினார்.
 அப்போது அவர் கூறியதாவது:
 காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து போன்ற மிகப்பெரிய முடிவுகளை இந்தியா தற்போது மேற்கொள்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் முன்பெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாதவையாக இருந்தன.
 மக்கள் கொடுத்த மிகப்பெரிய வெற்றியால் கிடைத்த பலமே, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் முடிவை எடுக்க எனக்கு தைரியம் அளித்தது. அந்த முடிவாலேயே ஜம்மு-காஷ்மீரும், லடாக்கும் தற்போது வளர்ச்சிப் பாதைக்கு திரும்புகின்றன.
 காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் காங்கிரஸ் முதலைக் கண்ணீர் வடிக்கிறது. "மீண்டும் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த உத்தரவை திரும்பப் பெறுவோம்' என்று முடிந்தால் காங்கிரஸ் கட்சி மக்களிடம் கூறட்டும்.
 அந்த முடிவை அடுத்த மக்களவைத் தேர்தல் அறிக்கையில் சேர்க்கும் துணிச்சல் காங்கிரஸுக்கு உள்ளதா?
 370-ஆவது பிரிவால்தான் காஷ்மீரில் ராணுவத்தினர் பலியாகினர். அந்தப் பிரிவின் மீது தனக்கு இருக்கும் அதீத விருப்பம் குறித்து உயிரிழந்த ராணுவத்தினரின் குடும்பத்திடம் தெரிவிக்க காங்கிரஸுக்கு துணிச்சல் உள்ளதா?
 சிறப்பு அந்தஸ்து ரத்து முடிவு எவருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதோ, அவர்களெல்லாம் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்களே அதுகுறித்து கேள்வி எழுப்புகின்றனர்; சிலர் அந்நிய நாடுகளிடம் உதவி கேட்கின்றனர்.
 ஜம்மு-காஷ்மீரில் வன்முறைச் சம்பவங்கள் நிகழாமல், அந்த மாநிலம் வளர்ச்சிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்று ஒட்டுமொத்த நாடும் விரும்புகிறது.
 ஜம்மு-காஷ்மீரும், லடாக்கும் நம்பிக்கை மற்றும் வளர்ச்சியின் பாதையில் தற்போது பயணிக்கத் தொடங்கிவிட்டன. இதற்காக எனக்கு நன்றி தெரிவிக்க வேண்டாம். நாட்டில் உள்ள 130 கோடி மக்களுக்கே அந்த நன்றி உரித்தாகும்.
 ஜம்மு-காஷ்மீரில் உள்ள தலித் சமூகத்தினர் கெளரவமான தொழில் வாய்ப்பு கிடைக்காமல் உள்ளனர். வால்மீகி சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பலருக்கு 4 தலைமுறைகளாக துப்புரவுத் தொழிலைத் தவிர, வேறு பணிகளுக்கான வாய்ப்பு கிடைத்ததே இல்லை.
 அந்த மாநில மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தையும், வளர்ச்சியையும் கொண்டுவருவதற்கே எனது அரசு முன்னுரிமை அளிக்கிறது.
 மக்களவைத் தேர்தலின்போது, ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வைப்பதற்காக காங்கிரஸ் கட்சியினர் மார்தட்டிக் கொண்டு மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் நீங்கள் அறிவீர்கள்.
 காங்கிரஸ் ஏற்படுத்திய எல்லா தடைகளையும் உடைத்தெறிந்து இந்தியாவுக்கான முதல் ரஃபேல் விமானம் கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
 பாதுகாப்புப் படையை மேலும் வலுப்படுத்துவதற்கு பாஜக உறுதிபூண்டுள்ளது.
 போதுமான ஆயுதங்களும், தளவாடங்களும் இல்லாமல் எதிரியின் தாக்குதலுக்கு நமது வீரர்கள் பலியாவதை எள்ளளவும் ஏற்றுக்கொள்ள இயலாது.
 உள்நாட்டிலேயே போர் விமானம் தயாரிக்கும் "தேஜஸ்' திட்டத்தை காங்கிரஸ் கிடப்பில் போட்டது. எவரது அழுத்தத்தின்பேரில் அவ்வாறு செய்யப்பட்டது எனத் தெரியவில்லை. ஆனால், பாஜக அரசு அதிலிருந்த தடைகளை நீக்கி அந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியது.
 முத்தலாக் தடைச் சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டது. அந்தச் சட்டத்தை நிறைவேற்ற விடாமல் தடுப்பதற்காக தன்னாலான அனைத்து முயற்சிகளையும் அக்கட்சி மேற்கொண்டது. ஆனால் பாஜக அரசு அவற்றை முறியடித்தது.
 மக்களுக்கான வளர்ச்சி மற்றும் மாற்றத்துக்காக மத்திய அரசு மேற்கொள்ளும் எந்தவொரு நடவடிக்கைக்கும், காங்கிரஸ் கட்சியும், அதைப் பின்பற்றும் தோழமை கட்சிகளும் தடுப்புச் சுவர்போல தடையாக நிற்கின்றன.
 ஹரியாணாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி முயற்சி தகர்ந்துவிட்டது. அக்கட்சிகள் சிதறிவிட்டன. ஆனால், முதல்வர் மனோகர் லால் கட்டர் என்ற பலமான கேப்டனின் தலைமையில் பாஜக அணி வலுவானதாக உள்ளது.
 முதல்வர் மனோகர் லால் கட்டரும், அவரது சகாக்களும் ஹரியாணா மாநிலத்தை புதிய வளர்ச்சியை நோக்கி இட்டுச் செல்கின்றனர்.
 நான் ஹரியாணாவுக்கு வரும்போதெல்லாம், உங்களிடையே இருக்கும்போதெல்லாம் எனது இல்லத்தில் இருப்பதைப் போல் உணர்கிறேன் என்று பிரதமர் மோடி பேசினார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com