காஷ்மீரில் போஸ்ட்பெய்டு செல்லிடப்பேசி சேவை தொடக்கம்: ஆனால் சில மணி நேரத்தில்?

ஜம்மு-காஷ்மீரில் 72 நாள் முடக்கத்துக்குப் பிறகு, 40 லட்சம் போஸ்ட்பெய்டு செல்லிடப்பேசி சேவைகள் திங்கள்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டன.
SMS services blocked in Kashmir
SMS services blocked in Kashmir

ஜம்மு-காஷ்மீரில் 72 நாள் முடக்கத்துக்குப் பிறகு, 40 லட்சம் போஸ்ட்பெய்டு செல்லிடப்பேசி சேவைகள் திங்கள்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டன.

ஆனால், செல்லிடப்பேசிகளின் போஸ்ட்பெய்டு சேவை தொடங்கிய சில மணி நேரங்களில், செல்லிடப்பேசிகள் மூலம் எஸ்எம்எஸ் அனுப்பும் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எஸ்எம்எஸ் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. போலியான செய்திகள் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் செல்லிடப்பேசி, இணைதள சேவைகள் முடக்கப்பட்டன.

இதனால், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரும், மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் முழுவதும் போஸ்ட்பெய்டு செல்லிடப்பேசி சேவைகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன. எனினும், இணையதள சேவைகள் வழங்கப்படவில்லை.

இது தொடர்பாக அதிகாரிகள் சிலர் கூறுகையில், "போஸ்ட்பெய்டு சேவைகள் மட்டுமே மீண்டும் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் அழைப்புகளை விடுக்கவும், குறுந்தகவல் அனுப்பவும் முடியும். அதே வேளையில், சுமார் 25 லட்சம் ப்ரீபெய்டு சேவைகளும், இணையதளச் சேவைகளும் தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளன. செல்லிடப்பேசி சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருப்பதற்காக பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்'' என்றனர்.

72 நாள்களுக்குப் பிறகு செல்லிடப்பேசி சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் மக்கள் உள்ளூர், வெளியூர்களிலுள்ள உறவினர்களிடமும், நண்பர்களிடமும் தொடர்புகொண்டு பேசினர். இது தொடர்பாக வாடிக்கையாளர் ஒருவர் கூறுகையில், ""நாட்டின் எல்லைகளைக் கடந்து தொழில்நுட்பம் உலக மக்களை ஒன்றுசேர்த்துள்ள காலத்தில், கடந்த 2 மாதங்களாக உலகத் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்தோம். இந்த நாள் எங்களுக்குப் பெரும் திருவிழாவைப் போல உள்ளது'' என்றார்.

"மக்களின் பாதுகாப்பே முக்கியம்': ஜம்மு-காஷ்மீரின் கதுவா நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் செய்தியாளர்களிடம் கூறியதாவது: செல்லிடப்பேசி சேவைகள் வழங்கப்படவில்லை என பலர் குற்றஞ்சாட்டி வந்தனர்.

செல்லிடப்பேசிகளை பயங்கரவாதிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வந்த காரணத்தினாலேயே அதன் சேவைகள் முடக்கப்பட்டன.

தற்போது செல்லிடப்பேசி சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும். விரைவில் இணையதள சேவைகளும் தொடங்கப்படும். ஜம்மு-காஷ்மீருக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என்றார் சத்யபால் மாலிக்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com