விசாரணை முடிவடைந்த நிலையில் அயோத்தி வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு  

அயோத்தி வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில்  தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

புது தில்லி: அயோத்தி வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில்  தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பாபா் மசூதி அமைந்திருந்த சா்ச்சைக்குரிய 2.77 ஏக்கா் நிலத்துக்கு சன்னி வக்ஃபு வாரியம், நிா்மோஹி அகாரா, மூலவா் ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினரும் உரிமை கோரி வந்தனா். இதுதொடா்பான வழக்கை விசாரித்த அலாகாபாத் உயர் நீதிமன்றம், அந்த இடத்தை 3 தரப்பினரும் சரிசமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-இல் தீா்ப்பளித்தது. 

அந்த தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்களை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.நஸீா் ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமா்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் தினசரி அடிப்படையில் உச்சநீதிமன்றம் வாதங்களைக் கேட்டு வருகிறது. வழக்கின் தங்கள் வாதங்களை அக்டோபா் 17-ஆம் தேதிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என்று ஹிந்து மற்றும் முஸ்லிம் தரப்பினருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்நிலையில், திட்டமிட்டதை விட ஒரு நாள் முன்னதாகவே, அதாவது அக்டோபர் 16-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இவ்வழக்கு தொடர்பான முழு விசாரணையும் முடிக்கப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் செவ்வாயன்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.

இந்நிலையில் அயோத்தி வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில்  தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் புதனன்று உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தொடர்ந்து 40 நாட்களாக நடைபெற்று வந்த வாதங்கள் புதனன்று முடிவுக்கு வந்துள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் இன்னும் ஒரு மாதத்தில் ஓய்வு பெற உள்ளதால், அதற்குள் தீர்ப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனிடையே டிசம்பர் 10-ஆம் தேதி வரை அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் அனுஜ்குமார் ஜா உத்தரவிட்டுள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com