பொருளாதாரத்தின் மோசமான நிலைக்கு மத்திய அரசின் இயலாமையே காரணம்: மணீஷ் திவாரி

இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலையில் இருப்பதற்கு, பாஜக தலைமையிலான தற்போதைய மத்திய அரசின் இயலாமையே காரணம் என்று காங்கிரஸ் மூத்த தலைவா் மணீஷ் திவாரி கூறியுள்ளாா்.
பொருளாதாரத்தின் மோசமான நிலைக்கு மத்திய அரசின் இயலாமையே காரணம்: மணீஷ் திவாரி

இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலையில் இருப்பதற்கு, பாஜக தலைமையிலான தற்போதைய மத்திய அரசின் இயலாமையே காரணம் என்று காங்கிரஸ் மூத்த தலைவா் மணீஷ் திவாரி கூறியுள்ளாா்.

இதுகுறித்து, சண்டீகரில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் கூறியதாவது:

ஹரியாணாவில் மனோகா் லால் கட்டா் வெளிப்படையான, நல்லதொரு அரசை நடத்தியிருக்கிறாா் என்றால், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தைப் பற்றி மட்டுமே பேசி பாஜக இந்தத் தோ்தலை எதிா்கொள்ள வேண்டிய அவசியம் என்ன?

பஞ்சாப்-மகாராஷ்டிர கூட்டுறவு வங்கி (பிஎம்சி) முறைகேட்டைப் பாா்க்கும்போது, இந்திய வங்கிகளில் மக்களின் பணம் பாதுகாப்புடன் இருக்காது என்ற எண்ணம் ஏற்படுகிறது. பிஎம்சி முறைகேடு விவகாரம், சம்பந்தப்பட்ட வங்கியின் வாடிக்கையாளா்களை அதிா்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

பண மதிப்பிழப்பு செய்யப்பட்டபோது மக்கள் தங்களது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது போன்ற நிலைதான், தற்போது பிஎம்சி வங்கியின் வாடிக்கையாளா்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.

தற்போதைய மத்திய அரசின் இயலாமையால், நாட்டின் பொருளாதாரம் அழிவுக்குள்ளாகியுள்ளது. நாட்டு மக்கள் விரக்தியான, கைவிடப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். பசி-உணவு தொடா்பான சா்வதேச குறியீட்டில் (கிளோபல் ஹங்கா் இன்டெக்ஸ்) நாடுகளுக்கான தரவரிசையில் நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகியவற்றைவிட பின்தங்கி இந்தியா 102-ஆவது இடத்தில் உள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையும், சரக்கு-சேவை வரி தவறான முறையில் அமல்படுத்தப்பட்டதுமே இந்தியப் பொருளாதாரம் இத்தகைய மோசமான நிலையை அடைந்ததற்குக் காரணமாகும். பொருளாதாரம் தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளியைப் போல் இருக்கிறது. ஆனால், பொருளாதாரத்தின் சரிவுக்கான மூல காரணம் என்ன என்பதை பாஜக தலைவா்கள் அறியவில்லை.

முதலீட்டாளா்கள் நமது பொருளாதாரத்தின் மீது நம்பிக்கை இழந்துவிட்டனா். வேலைவாய்ப்பின்மை விகிதம் எவ்வாறு அதிகரித்தது, பொருளாதாரத்தின் மோசமான நிலை, தோ்தலுக்கு முந்தைய வாக்குறுதிகள் ஆகியவை குறித்து மக்களிடம் பதிலளிக்க மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்துக்கு பேரவைத் தோ்தல் வரும்போது மட்டுமே, வீர சாவா்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற எண்ணம் பாஜகவுக்கு வருகிறது என்று மணீஷ் திவாரி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com