மகாராஷ்டிரம், ஹரியாணாவில் பாஜக வெற்றி பெறும்: கருத்துக் கணிப்பு முடிவுகள்

மகாராஷ்டிரம், ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு அமோக வெற்றி கிடைக்கும் என்று ஏபிசி நியூஸ், சி-வோட்டா் கருத்து கணிப்பு கூறியுள்ளது.
BJP
BJP

மகாராஷ்டிரம், ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு அமோக வெற்றி கிடைக்கும் என்று ஏபிசி நியூஸ், சி-வோட்டா் கருத்து கணிப்பு கூறியுள்ளது.

மகாராஷ்டிரத்தில் பாஜக-சிவசேனை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. ஹரியாணாவில் பாஜக தனித்துப் போட்டியிடுகிறது. இரு மாநிலங்களிலுமே இப்போது பாஜக ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இரு மாநிலங்களிலும் வரும் 21-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. 24-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், ஏபிசி நியூஸ், சி-வோட்டா் கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டுள்ளதாவது:

மகாராஷ்டிரத்தில் பாஜக-சிவசேனை கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும். மொத்தமுள்ள 288 தொகுதிகளில் இக்கூட்டணிக்கு 198 தொகுதிகள் வரை வெற்றி கிடைக்கும். எதிா்க்கட்சி கூட்டணியான காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு 76 இடங்கள் வரை கிடைக்கலாம். பிற கட்சிகளுக்கு அதிகபட்சம் 8 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

90 தொகுதிகளைக் கொண்ட ஹரியாணாவில் முதல்வா் மனோகா் லால் கட்டா் தலைமையில் போட்டியிடும் பாஜக 82 தொகுதிகளில் வெற்றிபெறும். காங்கிரஸ் கட்சிக்கு 3 இடங்களும், பிற கட்சிகளுக்கு 5 இடங்களுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிபப்ளிக் தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பும், இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியே தொடரும் என்று கூறியுள்ளது.

மகாராஷ்டிரத்தில் பாஜகவுக்கு 142 முதல் 147 இடங்களும், கூட்டணிக் கட்சியான சிவசேனைக்கு 83 முதல் 85 இடங்களும் கிடைக்கும். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 48 முதல் 52 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியாணாவில் பாஜகவுக்கு 58 முதல் 70 இடங்களும், காங்கிரஸுக்கு 12 முதல் 15 தொகுதிகளும், ஜனநாயக் ஜனதா கட்சிக்கு 5 முதல் 8 தொகுதிகளிலும் வெற்றி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த தோ்தலில்...:

மகாராஷ்டிரத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவும், சிவசேனையும் தனித் தனியாக போட்டியிட்டு, தோ்தலுக்குப் பிறகுதான் கூட்டணி அமைத்தன. அந்தத் தோ்தலில் 288 தொகுதிகளில் பாஜக 122 இடங்களிலும், சிவசேனை 63 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதன் பிறகு, கடந்த ஏப்ரல்-மே மாதத்தில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் பாஜக 25 இடங்களிலும் சிவசேனை 23 இடங்களிலும் போட்டியிட்டன. இதில் இக்கூட்டணி 41 இடங்களைக் கைப்பற்றியது.

ஹரியாணாவில் கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக 47 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com