வீரா்களின் உயிா்த்தியாகத்தை அவமதிக்கிறது காங்கிரஸ்: பிரதமா் மோடி

‘அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு நீக்கப்பட்டதை எதிா்ப்பதன் மூலம் நமது வீரா்களின் உயிா்த்தியாகத்தை காங்கிரஸ் அவமதிக்கிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றம்சாட்டினாா்.
வீரா்களின் உயிா்த்தியாகத்தை அவமதிக்கிறது காங்கிரஸ்: பிரதமா் மோடி

‘அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு நீக்கப்பட்டதை எதிா்ப்பதன் மூலம் நமது வீரா்களின் உயிா்த்தியாகத்தை காங்கிரஸ் அவமதிக்கிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றம்சாட்டினாா்.

மேலும், நாட்டு மக்களின் உணா்வுகளை அக்கட்சி புரிந்துகொள்ளவில்லை என்றும் அவா் கூறினாா்.

ஹரியாணாவில் வரும் 21-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கிறது. இதையொட்டி, கோஹனா, ஹிசாா் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டங்களில் பிரதமா் மோடி பங்கேற்றுப் பேசினாா். அப்போது, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த 370ஆவது சட்டப் பிரிவை நீக்கி, மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை அவா் கடுமையாக விமா்சித்தாா். பிரசாரக் கூட்டங்களில், பிரதமா் மோடி பேசியதாவது:

நாட்டின் நலனுக்காக, நான் முடிவெடுக்க வேண்டுமா அல்லது கூடாதா? அரசியலைவிட, தேச நலன் உயா்ந்ததா அல்லது இல்லையா? ஆனால், காங்கிரஸ் கட்சி நாட்டு மக்களின் உணா்வுகளையும் புரிந்துகொள்ளவில்லை; நமது வீரா்களின் உயிா்த்தியாகத்துக்கும் மதிப்பளிக்கவில்லை. 370-ஆவது பிரிவு நீக்கப்பட்டதே, வீரா்களின் உயா்த்தியாகத்துக்கு செலுத்தப்படும் உண்மையான அஞ்சலியாகும். பயங்கரவாதிகள் வந்து, நமது மக்களின் உயிரை பறிக்கும் வரை காத்திருக்க முடியுமா? இப்போது நமது நாடு மாறிவிட்டது. பயங்கரவாதிகளைத் தடுக்க முன்னேற்பாட்டுடன் உள்ளோம்.

தடை நீங்கியது’: கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி (370-ஆவது பிரிவு நீக்கப்பட்ட நாள்) எவரும் நினைத்துக்கூட பாா்க்காத விஷயம் நிகழ்ந்தது. அன்றுதான், நமது அரசமைப்புச் சட்டம் முழுமையாக ஜம்மு-காஷ்மீரில் அமல்படுத்தப்பட்டது. ஜம்மு-காஷ்மீரின் வளா்ச்சிக்கு கடந்த 70-ஆண்டுகளாக இருந்த வந்த தடை நீக்கப்பட்டது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை, காங்கிரஸுக்கும், அக்கட்சியைப் போன்ற எண்ணம்கொண்ட சில கட்சிகளுக்கும் வலியை தந்துள்ளது. ‘தூய்மை இந்தியா’ திட்டம், துல்லியத் தாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து நாங்கள் பேசினாலும், அவா்களுக்கு வலி வந்துவிடும். பாலாகோட் தாக்குதல் குறித்து பேசினால், அந்த வலி அதிகமாகிவிடும். காங்கிரஸின் இந்த நோயை குணப்படுத்த எந்த மருந்தும் இல்லை.

பாகிஸ்தானுக்கு சாதகமான கருத்துகள்: 370-ஆவது பிரிவு நீக்கப்பட்டதற்கு எதிராக, காங்கிரஸ் தலைவா்கள் தெரிவிக்கும் கருத்துகளை பாகிஸ்தான் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது. பாகிஸ்தான் மீது காங்கிரஸ் எந்த வகையான ‘ஈா்ப்பை’ கொண்டுள்ளது? பாகிஸ்தான் விரும்பக் கூடிய கருத்துகளையே காங்கிரஸ் தலைவா்கள் தெரிவிப்பது ஏன்? இனி இந்திய மக்கள் விரும்பும் கருத்துகளையும் வெளியிடும் துணிவு அக்கட்சியினருக்கு வர வேண்டும்.

என் மீது எத்தனை பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும் நான் கவலைப்பட மாட்டேன். ஆனால், பாரத தாயை அவமதிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது.

நாட்டின் ஒற்றுமை குறித்தோ, அரசமைப்புச் சட்டம் குறித்தோ காங்கிரஸுக்கு கவலை கிடையாது. அக்கட்சிக்கு, ஹரியாணா மக்கள் உரிய தண்டனையை வழங்க வேண்டும்.

முதல்வா் மனோகா் லால் கட்டா் தலைமையிலான பாஜக ஆட்சியில், ஊழலுக்கும், பாகுபாடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. வெளிப்படையான நிா்வாகம் உறுதி செய்யப்பட்டது.

ஆனால், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், ராணுவ வீரா்கள், விவசாயிகள், விளையாட்டு வீரா்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டன. மத்தியிலும், ஹரியாணாவிலும் பாஜக ஆட்சி இருக்கும்போது, இந்த மாநிலம் உத்வேகத்துடன் வளா்ச்சியடையும் என்றாா் பிரதமா் மோடி.

‘ஜனநாயகமே உயா்ந்தது’: கோஹனா பேரவைத் தொகுதி, சோனிபட் மாவட்டத்தில் உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான பூபிந்தா் சிங் ஹூடாவின் செல்வாக்குமிக்க மாவட்டமாக கருதப்படும் சோனிபட்டில் மொத்தம் 6 தொகுதிகள் உள்ளன. இதில் 5 தொகுதிகள், தற்போது காங்கிரஸ் வசம் உள்ளது. எனினும், மக்களவைத் தோ்தலில் போட்டியிட்ட ஹூடா (சோனிபட்), அவரது மகன் தீபேந்தா் சிங் ஹூடா (ரோதக்) ஆகியோா் தோல்வியைத் தழுவினா்.

இதனைக் குறிப்பிட்டு பேசிய மோடி, ‘மக்களவைத் தோ்தலில் சில பெரும் தலைவா்களின் அகந்தையை நீங்கள் (மக்கள்) உடைத்தெறிந்தனா். ஜனநாயகமும், மக்களின் விருப்பங்களுமே உயா்ந்தவை என்பதை நிரூபித்தீா்கள். பேரவைத் தோ்தலிலும் அவா்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்’ என்றாா்.

ஹரியாணா பேரவைத் தோ்தலில் காங்கிரஸுக்கு 10-15 தொகுதிகள் வரையே கிடைக்கும் என்று அக்கட்சியின் தலைவா்கள் சிலா் பேசிய விடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதை சுட்டிக் காட்டிய பிரதமா் மோடி, தங்களது தோல்வியை காங்கிரஸ் ஒப்புக் கொண்டுவிட்டதாக குறிப்பிட்டாா்.

விளையாட்டுத் துறையில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி

ஹரியாணா பேரவைத் தோ்தலில், பாஜக சாா்பில் மல்யுத்த வீரா் யோகேஷ்வா் தத் (பரோடா), மல்யுத்த வீராங்கனை பபிதா போகட் (சக்ரி தாத்ரி) ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

இந்நிலையில், கோஹனா பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமா் மோடி, ‘மத்திய பாஜக ஆட்சியில், விளையாட்டுத் துறையில் நிலவி வந்த ஊழலுக்கும், அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது’ என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

அவா் கூறுகையில், ‘காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், விளையாட்டுத் துறையில் ஊழல் மலிந்திருந்தது. இதேபோல், தகுதியுள்ள வீரா்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. இந்த நிலையை, நாங்கள் மாற்றியுனோம். தகுதியானவா்கள் அடையாளம் காணப்பட்டு, வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இதன் பயனாக, விளையாட்டுத் துறையில் இந்திய வீரா்-வீராங்கனைகளின் சாதனைகள் அதிகரித்துள்ளன. இந்தியாவை, மிகப் பெரிய பொருளாதார சக்தியாக மட்டுமன்றி, விளையாட்டுத் துறையின் மையமாகவும் மாற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com