10 பாக். வீரர்கள்,  20 பயங்கரவாதிகள் பலி: இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியருகே பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, அந்நாட்டு ராணுவ நிலைகளைக் குறிவைத்தும், எல்லையோரத்தில் உள்ள பயங்கரவாத
ஜம்மு}காஷ்மீரில் உள்ள கதுவா மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் சேதமடைந்த வீட்டை ஞாயிற்றுக்கிழமை பார்வையிடும் அதிகாரிகள்.
ஜம்மு}காஷ்மீரில் உள்ள கதுவா மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் சேதமடைந்த வீட்டை ஞாயிற்றுக்கிழமை பார்வையிடும் அதிகாரிகள்.


புது தில்லி: ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியருகே பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, அந்நாட்டு ராணுவ நிலைகளைக் குறிவைத்தும், எல்லையோரத்தில் உள்ள பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்தும் இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தியது. 

இதில், 3 பயங்கரவாத முகாம்கள் அழித்தொழிக்கப்பட்டன. பாகிஸ்தான் வீரர்கள் 10 பேரும், பயங்கரவாதிகள் 20 பேரும் உயிரிழந்தனர். 

பாலாகோட் தாக்குதலுக்குப் பிறகு இந்திய ராணுவம் நடத்திய மிக முக்கியமான பதிலடி தாக்குதல் இதுவாகும்.

முன்னதாக, பாகிஸ்தான் படையினரின் தாக்குதலில் 2 இந்திய வீரர்களும், உள்ளூர்வாசி ஒருவரும் உயிரிழந்தனர்.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: குப்வாரா மாவட்டத்தில் உள்ள தங்கதார் செக்டாரை ஒட்டியுள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவத்தினரைக் குறிவைத்து பாகிஸ்தான் படையினர் சனிக்கிழமை மாலை துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் இந்திய வீரர்கள் இருவரும், உள்ளூர்வாசி ஒருவரும் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர். ஒரு வீடும், அரிசி கிடங்கும் முற்றிலுமாக சேதமடைந்தது.

இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவ நிலைகளைக் குறிவைத்தும், தங்கதார் செக்டாருக்கு எதிர்ப்புறமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள நீலம் பள்ளத்தாக்கில் இருந்த 4 பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்தும் இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்தனர். பீரங்கி குண்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த நேரத்தில் ஒவ்வொரு பயங்கரவாத முகாமிலும் 10 முதல் 15 பயங்கரவாதிகள் வரை இருந்ததாகத் தெரிகிறது.

இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 10 பேர் உயிரிழந்தனர். பயங்கரவாதிகளில் பலர் உயிரிழந்தனர் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே, இந்த தாக்குதலில் 20 பயங்கரவாதிகள் உயிரிழந்துவிட்டனர் என்றும், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவுவதற்கு உதவிடும் வகையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அதன் தொடர்ச்சியாக, இந்திய ராணுவம் பதிலடி கொடுக்க வேண்டியதாகி விட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் பதற்றமான சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் பயங்கரவாதிகளை அனுப்பி வைப்பதற்கு பாகிஸ்தான் முயற்சி செய்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ராஜ்நாத் சிங் ஆலோசனை: பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்திய அடுத்த சில மணி நேரத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் தொலைபேசியில் தொடர்புகொண்டு இந்திய ராணுவத்தின் பதிலடி குறித்து விளக்கம் அளித்தார். நிலைமையை உன்னிப்பாக கவனித்து வரும் ராஜ்நாத் சிங், தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்குமாறு ராவத்தை கேட்டுக் கொண்டார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவத்தின் 
பதிலடியால் அழிக்கப்பட்ட பயங்கரவாத முகாம்கள்.

கதுவாவிலும் தாக்குதல்: 

கதுவா மாவட்டத்தில் சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளைக் குறிவைத்து சிறிய ரக பீரங்கிகளால் பாகிஸ்தான் படையினர் சனிக்கிழமை இரவு ஏழரை மணியளவில் தாக்குதல் நடத்தினர். அங்குள்ள ஹீரா நகரில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளைத் தடுத்து நிறுத்துவதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. இதில், வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்தது. வீட்டின் உரிமையாளர் சையது அலி லேசான காயமடைந்தார். அதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் படையினருக்கு எல்லைப் பாதுகாப்புப் படையினர் தக்க பதிலடி கொடுத்தனர். சனிக்கிழமை இரவு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.40 மணி வரை இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நீடித்தது என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

3 பயங்கரவாத முகாம்கள் அழிப்பு 

பாகிஸ்தானின் அத்துமீறல்கள் தொடர்ந்தால், இந்தியா பதிலடி கொடுக்கத் தயங்காது என்று ராணுவத் தலைமைத் தளபதி விபின் ராவத் கூறினார். 
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில் இருந்து எல்லைக்கு அப்பால் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவுவது குறித்து தொடர்ந்து உளவுத் தகவல்கள் கிடைத்து வருகின்றன. இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் 3 பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிந்தன. இதுவரை கிடைத்த தகவல்படி, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 10 பேர் உயிரிழந்தனர்; பயங்கரவாதிகள் பலர் உயிரிழந்தனர்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com