இந்திய ரயில்வே வரலாற்றில் முதன்முறையாக.. பயணிகளுக்கு ரூ. 1.62 லட்சம் இழப்பீடு!

தில்லி - லக்னௌ தேஜஸ் விரைவு ரயில் 3 மணி நேரம் தாமதமானதால், பயணிகளுக்கு ஐஆர்சிடிசி ரூ. 1.62 லட்சம் இழப்பீடு வழங்கவுள்ளது.
இந்திய ரயில்வே வரலாற்றில் முதன்முறையாக.. பயணிகளுக்கு ரூ. 1.62 லட்சம் இழப்பீடு!


தில்லி - லக்னௌ தேஜஸ் விரைவு ரயில் 3 மணி நேரம் தாமதமானதால், பயணிகளுக்கு ஐஆர்சிடிசி ரூ. 1.62 லட்சம் இழப்பீடு வழங்கவுள்ளது.  

தில்லி-லக்னெள இடையே தேஜஸ் விரைவு ரயில் காலதாமதமாக வந்தால், பயணிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று இந்திய ரயில்வே சுற்றுலாக் கழகம் (ஐஆா்சிடிசி) கடந்த 1-ஆம் தேதி தெரிவித்தது. இந்நிலையில், கடந்த 19-ஆம் தேதி இந்த ரயில் தாமதமாக வந்துள்ளது. 

தேஜஸ் விரைவு ரயில் லக்னௌவில் இருந்து காலை 9.55 மணியளவில்தான் புறப்பட்டுள்ளது. ஆனால், ரயில் புறப்பட வேண்டிய சரியான நேரம் காலை 6.10 ஆகும். இதனால், நண்பகல் 12.25 மணிக்கு தில்லி வந்துசேர வேண்டிய அந்த ரயில் பிற்பகல் 3.40 மணிக்கு வந்து சேர்ந்தது.

தொடர்ந்து, தில்லியில் இருந்து லக்னௌவுக்கு பிற்பகல் 3.35 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் மாலை 5.30 மணிக்கே புறப்பட்டது. இதனால், இரவு 10.05 மணிக்குப் பதிலாக இரவு 11.30 மணிக்கே ரயில் வந்து சேர்ந்தது. 

இதனால், லக்னௌவில் இருந்து தில்லிக்குப் பயணித்த 450 பயணிகளுக்கு தலா ரூ. 250 இழப்பீடாகவும், தில்லியில் இருந்து லக்னௌவுக்குப் பயணித்த 500 பயணிகளுக்கு தலா ரூ. 100 இழப்பீடாகவும் வழங்கப்படும் என்று ரயில்வே நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

இந்த இழப்பீட்டை அனைத்து ரயில் பயணச்சீட்டிலும் வழங்கப்பட்டுள்ள காப்பீட்டு இணைப்பு மூலம் பயணிகள் பெற்றுக்கொள்ளலாம் என்று ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், அக்டோபர் 19-ஆம் தேதி கான்பூரில் ரயில் தடம்புரண்டதுவே இந்த தாமத்தத்துக்கான காரணம் என்றும் அவர் தெரிவித்தார். இந்திய ரயில்வே வரலாற்றில் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.

இதையடுத்து, அக்டோபர் 20-ஆம் தேதி லக்னௌவில் இருந்து புறப்பட்ட தேஜஸ் விரைவு ரயில் 24 நிமிடம் தாமதமாகத்தான் தில்லி வந்தடைந்தது. தில்லியில் இருந்து லக்னௌவுக்கு சரியான நேரத்திலேயே இந்த ரயில் பயணித்தது. இருந்தபோதிலும், ஐஆர்சிடிசி விதிப்படி ரயில் குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் தாமதமானால் மட்டும் இழப்பீடு வழங்கப்படும்.

முன்னதாக, இதுகுறித்து ஐஆா்சிடிசி கடந்த 1-ஆம் தேதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறுகையில்,

"தில்லியிலிருந்து உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெள நகருக்கு இடையே முதல் முறையாக வரும் 4-ஆம் தேதி தேஜஸ் ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது. 

இந்த ரயில் வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு மேலானால், ரூ.100 இழப்பீடாக அளிக்கப்படும். ரயில் வருவதற்கு 2 மணி நேரத்துக்கும் மேல் தாமதமானால், பயணிகளுக்கு ரூ.250 இழப்பீடு அளிக்கப்படும்.

அத்துடன், தேஜஸ் ரயிலில் பயணிப்பவர்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான இலவசக் காப்பீடு அளிக்கப்படும். மேலும், பயணிகளின் இல்லத்துக்கும் சேர்த்து காப்பீட்டுப் பலன் கிடைக்கும். அதாவது, பயண நேரத்தில் பயணிகளின் இல்லத்தில் கொள்ளை சம்பவங்கள் நேர்ந்தால் அதற்கும் இழப்பீடு வழங்கப்படும். இதுவும் முதல் முறையாகும். 

தில்லி-லக்னெள இடையே வாரத்தில் 6 நாள்களுக்கு தேஜஸ் ரயில் இயக்கப்படவுள்ளது. லக்னெள-தில்லி பயணக் கட்டணம் ரூ.1,125 (ஏசி வகுப்பு), ரூ.2,310 (எக்சிகியூட்டிவ் வகுப்பு) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தில்லியிலிருந்து லக்னெளவுக்கு செல்ல ரூ.1,280, ரூ.2,450 பயணக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்குத் தேவைப்பட்டால் இலவசமாக குடிநீரும், தேநீரும் வழங்கப்படும்.

விமானங்களில் வழங்கப்படுவது போல் டிராலியில் உணவு கொண்டுவந்து தரப்படும்.

பல்வேறு நாடுகளில் ரயில்கள் உரிய நேரத்தில் வராமல் இருந்தால், பயணிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.

ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் ரயில் காலதாமதமாக வந்தால் பயணிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. அதை அலுவலகங்களிலும், கல்லூரிகளிலும் அவர்கள் காண்பிக்க பயன்படுத்திக் கொள்கின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com