ஆரே காலனியில் மெட்ரோ கட்டுமானப் பணிக்குத் தடையில்லை: உச்சநீதிமன்றம்

மும்பை ஆரே காலனியில் மரம் வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், மெட்ரோ கட்டுமானப் பணிக்கு எந்தவித தடையும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆரே காலனியில் மெட்ரோ கட்டுமானப் பணிக்குத் தடையில்லை: உச்சநீதிமன்றம்


மும்பை ஆரே காலனியில் மரம் வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், மெட்ரோ கட்டுமானப் பணிக்கு எந்தவித தடையும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், மும்பை ஆரே காலனியில் மெட்ரோ ரயில் நிலையத்துக்கான கட்டுமானப் பணிக்காக வனம் போன்ற அந்தப் பகுதியில் இருக்கும், 2656 மரங்களை வெட்ட மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஆரே காலனியில் மரங்களை வெட்டக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கடந்த 7-ஆம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவிக்கையில், "இந்த திட்டத்துக்காக வெட்ட வேண்டிய மரங்கள் அனைத்தும் ஏற்கெனவே வெட்டப்பட்டுவிட்டது. மேற்கொண்டு எந்த மரங்களும் வெட்டப்படாது" என்று உறுதியளித்தார்.

இதையடுத்து, மும்பை மெட்ரோ தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி, "டெல்லி மெட்ரோ சேவையை 60 லட்சம் பயணிகள் பயன்படுத்துகின்றனர். இது தில்லியில் சுற்றுச்சூழல் மாசுவைக் கட்டுப்படுத்துகிறது. மற்ற கட்டுமானத் திட்டங்களுக்கு இந்த இடம் பயன்படுத்தப்படவுள்ளது என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டாகும். மெட்ரோ வாகன நிறுத்துமிடத்துக்காக மட்டுமே இந்த இடம் பயன்படுத்தப்படுகிறது" என்றார்.

தொடர்ந்து மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கோலி கொன்சால்வெஸ், "கிடைத்த தகவல்களின்படி, இடம் மாற்றி நடப்பட்ட மரங்கள் நிறைய தற்போது நல்ல நிலையில் இல்லை" என்றார். 

இதையடுத்து, எத்தனை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன, எத்தனை மரங்கள் இடம் மாற்றி நடப்பட்டுள்ளது என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மகாராஷ்டிர அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், கடந்த 7-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு, மரங்களை வெட்டக் கூடாது என்பதற்கு மட்டுமே பொருந்தும் என்றும், மும்பை மெட்ரோ கட்டுமானப் பணிக்கு எந்தவித தடையும் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அதேசமயம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையான நவம்பர் 15-ஆம் தேதி வரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உச்சநீதிமன்றம் மகாராஷ்டிர அரசை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க: ஆரே எழுப்பும் கேள்வி...| மும்பை ஆரே வனப்பகுதி குறித்த தலையங்கம்

வழக்கு விவரம்:

ஆரே காலனி, ஏராளமான மரங்களைக் கொண்ட வனம் போன்ற பகுதியாகும். அங்கு மெட்ரோ ரயில் பணிமனை அமைக்க முடிவு செய்யப்பட்டதை அடுத்து, அந்தப் பகுதியில் இருக்கும் 2,656 மரங்களை வெட்ட மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பை உயர்நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், அந்த மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, ஆரே காலனி பகுதியில் மரங்களை வெட்டும் பணியை மெட்ரோ ரயில் நிர்வாகம் அன்று இரவே தொடங்கியது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் தாங்கள் உச்சநீதிமன்றத்தை நாட இருப்பதாகவும், அதனால் மரங்களை வெட்டுவதற்கு ஒரு வார காலத்துக்கு தடை விதிக்கக் கோரியும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் மும்பை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்தனர்.

 ஆனால் அந்த மனுவையும் மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதன்பிறகு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயைச் சந்தித்த நொய்டாவைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர்கள் சிலர், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, அந்த சட்டக் கல்லூரி மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், அந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரிப்பதாகத் தெரிவித்தது. 

உச்சநீதிமன்ற நீதிபதிகள் வரும் 12-ஆம் தேதி வரை தசரா விடுமுறையில் இருப்பதால், இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க சிறப்பு அமர்வு ஏற்படுத்தப்படுவதாகவும், அந்த அமர்வு அக்டோபர் 7 விசாரணை நடத்தும் என்றும் உச்சநீதிமன்ற இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, கடந்த 7-ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆரே காலனியில் மரங்களை வெட்டக் கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. மேலும் வழக்கு விசாரணையை அக்டோபர் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com