பிரதமர் மோடியை சந்தித்தார் அபிஜித் பானர்ஜி

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு மிகவும் ஆக்கப்பூர்வமாக அமைந்தது என்று பிரதமர் நரேந்திர மோ
தில்லியில் செவ்வாய்க்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசிய பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி.
தில்லியில் செவ்வாய்க்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசிய பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி.


பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு மிகவும் ஆக்கப்பூர்வமாக அமைந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இந்திய-அமெரிக்கப் பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி, பிரான்ஸ் வம்சாவளி அமெரிக்கரும், அபிஜித் பானர்ஜியின் மனைவியுமான எஸ்தர் டஃப்லோ, அமெரிக்கப் பொருளாதார நிபுணர் மைக்கேல் கிரெமர் ஆகியோருக்கு அண்மையில் அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிலையத்தில் (எம்ஐடி) பணியாற்றி வரும் அபிஜித் பானர்ஜி இந்தியாவுக்கு வந்துள்ளார்.

முன்னதாக, இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவது உண்மைதான்; அதனைத் தடுக்க அவசர நடவடிக்கைகள் தேவை என்று அபிஜித் பானர்ஜி கூறியிருந்தார். இதையடுத்து, அபிஜித் பானர்ஜி இடதுசாரி சிந்தனையாளர். மக்களவைத் தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சி அறிவித்த ஏழைக்குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 வழங்கும் நியாய் திட்டத்தை அவர் பாராட்டுகிறார். ஆனால், அவர் காங்கிரஸ் கட்சிக்கு வகுத்தளித்த திட்டத்தை தேர்தலில் மக்கள் நிராகரித்து விட்டனர்  என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடியை அவர் தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்தார். இந்தச் சந்திப்பு தொடர்பாக சுட்டுரையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், அபிஜித் பானர்ஜியுடனான சந்திப்பு சிறப்பாக அமைந்தது. 

மனிதகுல முன்னேற்றத்தையே தனது நோக்கமாகக் கொண்டு அபிஜித் பணியாற்றி வருகிறார் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அவரது அனைத்து முயற்சிகளுக்கும் எனது வாழ்த்துகள். அவருடன் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆக்கப்பூர்வமாக ஆலோசனை நடத்தினேன். 
அவரால் இந்தியாவே பெருமை கொள்கிறது. ஒட்டுமொத்தத்தில் இந்தச் சந்திப்பு மிகவும் சிறப்பானதாகவும், ஆக்கப்பூர்வமாகவும் அமைந்தது என்று கூறியுள்ளார். அத்துடன், சந்திப்பு தொடர்பான படத்தையும் மோடி வெளியிட்டுள்ளார்.

பிரதமரின் நகைச்சுவையை பகிர்ந்து கொண்ட அபிஜித் பானர்ஜி
ஊடகத்தினர் உங்களிடம் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பி, எனக்கு எதிராக கருத்துக் கூற வைக்க முயற்சித்து வருகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி நகைச் சுவையாகக் கூறியதாக அபிஜித் பானர்ஜி கூறியுள்ளார்.
பிரதமர் மோடியைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

பிரதமரை சந்தித்ததில் பெருமிதம் அடைகிறேன். எங்களது சந்திப்புக்கு கூடுதல் நேரம் ஒதுக்கினார். நாட்டின் முன்னேற்றம் குறித்து அவர் வித்தியாசமாக சிந்திக்கிறார். அரசு அதிகாரிகளின் செயல்பாடுகளில் சீர்திருத்தம் கொண்டுவர முயற்சி செய்துவருகிறார்.
பிரதமருடனான சந்திப்பு இனிமையானதாகவும், சிறப்பாகவும் இருந்தது. ஊடகத்தினர் உங்களிடம் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பி, உங்களை எனது எதிரியாக்க முயன்று வருகின்றனர் என்று பிரதமர் மோடி நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். அவர் பத்திரிகை, தொலைக்காட்சி செய்திகள் அனைத்தையும் தெரிந்துவைத்துள்ளார். 
ஊடகத்தினரின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறார். நீங்கள் (ஊடகத்தினர்) உங்களுக்கு விருப்பமான பதிலை பெறவே அதிகம் முயலுகிறீர்கள் என்பதையும் பிரதமர் தெரிந்துவைத்துள்ளார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com