பிரதமர் மோடிக்கு வால்மார்ட் சிஇஓ கடிதம்

இந்தியாவில் புதிய கிளைகளைத் தொடங்குவதற்கான நடைமுறைகளைக் குறைக்க வேண்டும் என்று கோரி வால்மார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) டக்ளஸ் மெக்மில்லன் பிரதமர் நரேந்திர மோடிக்கு


இந்தியாவில் புதிய கிளைகளைத் தொடங்குவதற்கான நடைமுறைகளைக் குறைக்க வேண்டும் என்று கோரி வால்மார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) டக்ளஸ் மெக்மில்லன் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த வால்மார்ட் நிறுவனம், ஃபிளிப்கார்ட் நிறுவனத்தை வாங்கி அதில் ரூ.1.12 லட்சம் கோடியை முதலீடு செய்துள்ளது. பிரதமர் மோடி அண்மையில் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தபோது, வால்மார்ட் சிஇஓ டக்ளஸ் மெக்மில்லன் அவரைச் சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: இந்தியப் பொருள்களை அதிக அளவில் கொள்முதல் செய்து, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கவும், வேலை வாய்ப்பை உருவாக்கவும் வால்மார்ட் நிறுவனம் உறுதிகொண்டுள்ளது. இந்திய அரசுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வால்மார்ட் நிறுவனம் தயாராக உள்ளது.
இந்தியாவில் நிலையான, வரவேற்கத்தக்க ஒழுங்குமுறைச் சூழல்கள் நிலவினால், ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் மீதான முதலீடுகளை அதிகரிக்கவும், அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவும். இந்தியர்களின் தகவல்கள் அனைத்தையும் உள்நாட்டிலேயே சேமித்து வைக்க வேண்டுமென்ற இந்திய அரசின் கொள்கையை நாங்கள் மதிக்கிறோம்.
ஃபிளிப்கார்ட், ஃபோன் பே ஆகிய நிறுவனங்கள் பயனாளர்களின் தகவல்களை உள்நாட்டிலேயே சேமித்து வைக்கின்றன. அதே வேளையில், இந்தக் கொள்கையானது தேவையற்ற எதிர்மறையான தாக்கத்தையும் நிறுவனங்களுக்கு ஏற்படுத்திவிடக் கூடாது. இந்தியச் சந்தையை மையமாகக் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வால்மார்ட் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. அதற்கு, பயனாளர்களின் தகவல்களை மற்ற நாடுகளுக்கு அனுமதிக்க வேண்டியது அவசியமாகும்.
இந்தியாவில் ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் புதிய கிளைகளைத் தொடங்க 45-க்கும் அதிகமான உரிமங்களைப் பெற வேண்டியுள்ளது. இதற்கு சுமார் 3 ஆண்டுகள் ஆகிறது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், உரிமம் பெறுவதற்கான இந்தக் காலம் அதிகமாக உள்ளது. இதைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் டக்ளஸ் மெக்மில்லன் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com