ஹரியாணாவின் அடுத்த முதல்வர் துஷ்யந்த் சவுதாலா: கூறியது யார் தெரியுமா? 

ஹரியானாவின் அடுத்த முதல்வராக ஜனநாயக ஜனதா கட்சித் தலைவர்  துஷ்யந்த் சவுதாலா இருப்பார் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அசோக் தன்வார் தெரிவித்துள்ளார். 
ஹரியாணாவின் அடுத்த முதல்வர் துஷ்யந்த் சவுதாலா: கூறியது யார் தெரியுமா? 

ஹரியாணாவின் அடுத்த முதல்வராக ஜனநாயக ஜனதா கட்சித் தலைவர்  துஷ்யந்த் சவுதாலா இருப்பார் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அசோக் தன்வார் தெரிவித்துள்ளார். 

ஹரியாணா மற்றும் மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் பல்வேறு மாநில சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதில், ஹரியாணாவில் தற்போதைய நிலவரப்படி, பாஜக 40 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி  30 இடங்களிலும், பிற கட்சிகள் 20 இடங்களிலும் முன்னிலையில் இருந்து வருகின்றன. ஹரியாணாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பெரும்பான்மைக்குத் தேவையான 46 இடங்களைப் பாஜக, காங்கிரஸ் ஆகிய இருகட்சிகளுமே பெறாததால் அம்மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. 

இதில்,  ஜனநாயக ஜனதா கட்சி தற்போதைய நிலவரப்படி 11 இடங்களில் முன்னிலையில் உள்ளது. கட்சி தொடங்கி ஓராண்டு கூட முடிவடையாத நிலையில், ஹரியாணாவில் ஆட்சி அமைக்கப் போவது யார்? என முடிவு செய்யும் வாய்ப்பை இக்கட்சி பெற்றுள்ளது.  ஜனநாயக ஜனதா கட்சியின் இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படும் தலைவர் துஷ்யந்த் சவுதாலாவே ஹரியாணாவின் அடுத்த முதல்வராக இருப்பார் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், ஹரியாணா மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான அசோக் தன்வார், 'ஹரியாணா மக்கள் பாஜக மற்றும் காங்கிரஸை நிராகரித்துள்ளனர். எனவே, ஜனநாயக ஜனதா கட்சியின் துஷ்யந்த் சவுதாலா முதல்வர் ஆவதற்கு இரு கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும். ஹரியாணாவின் அடுத்த முதல்வராக அவரே இருப்பார். இரு கட்சிகளுமே அவரை ஆதரிக்க விருப்பம் தெரிவிக்கின்றன. துஷ்யந்த் சவுதாலா எனது தம்பி போன்றவர். அவருக்கு இந்தத் தேர்தலில் எனது நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினேன்' என்று கூறியுள்ளார். 

ஹரியாணாவில் இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், ஜனநாயக ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை நடைபெற இருக்கிறது. ஜனநாயக ஜனதா கட்சி ஹரியாணாவில் யாருடன் இணைந்து கூட்டணி அமைக்கும் என்ற இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com