கதுவா பலாத்கார வழக்கு விசாரணையில் சித்திரவதை நடைபெறவில்லை:ஜம்மு-காஷ்மீர் டிஜிபி

கதுவா சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு விசாரணையில் சித்திரவதை ஏதும் நடைபெறவில்லை. இவ்வழக்கை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) உறுப்பினர்கள் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு நீதிமன்றம்
ஸ்ரீநகரில் செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்த காவல் துறைத் தலைமை இயக்குநர் தில்பாக் சிங் (இடது).
ஸ்ரீநகரில் செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்த காவல் துறைத் தலைமை இயக்குநர் தில்பாக் சிங் (இடது).


கதுவா சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு விசாரணையில் சித்திரவதை ஏதும் நடைபெறவில்லை. இவ்வழக்கை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) உறுப்பினர்கள் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பின்பற்றப்படும் என்று ஜம்மு-காஷ்மீர் காவல்துறை டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்தார்.
இவ்வழக்கை விசாரிக்கும் எஸ்ஐடி குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் சித்திரவதையில் ஈடுபட்டனர் என்பது கண்கூடாகத் தெரிகிறது என்பதால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு  கூறிய ஜம்மு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டிருந்த நிலையில் டிஜிபி தில்பாக் சிங் இவ்வாறு கருத்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) பதிவு செய்யுமாறு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைப் பரிசீலித்து வருகிறோம். அதன்படி தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அனைத்து  முதல் தகவல் அறிக்கைகளுமே உண்மைத் தகவல்களின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டியதில்லை. சில நேரங்களில் அதற்கு ஓர் நோக்கம், உள்நோக்கம், நீதிமன்ற உத்தரவு ஆகியவையும் காரணமாக இருக்கின்றன. நாங்கள் (காவல்துறை )ஆயிரக்கணக்கான வழக்குகளை விசாரிக்கிறோம். ஆண்டுதோறும் 17,000 வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
அதற்காக விசாரணை என்ற பெயரில் நாங்கள் அப்பாவி மக்களை பிடித்துச் சென்று துன்புறுத்துவதாக அர்த்தம் இல்லை. சில வழக்குகள் சாதாரணமானவை. சில வழக்குகள் மிகவும் தீவிரமானவை. அதுபோன்ற வழக்குகளில் இதுபோன்ற நடவடிக்கைகளும் எதிர்வினைகளும் இருக்கலாம். சட்டப்படி நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அதுபற்றி கவலைப்படத் தேவையில்லை என்றார் அவர்.
வழக்கின் பின்னணி: கதுவா மாவட்டத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி ஒரு கும்பலால் கடந்த ஜனவரி 10-ஆம் தேதி கடத்தப்பட்டார். அதன் பின் அங்குள்ள ஒரு கிராமக் கோயிலில் அடைத்து வைக்கப்பட்டார். அங்கு மயக்க நிலையில் நான்கு நாள்களுக்கு வைக்கப்பட்டிருந்த அவர் கூட்டாக பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
இக்குற்றம் நடைபெற்ற கோயிலின் காப்பாளர் சஞ்சி ராம், சிறப்பு காவல்துறை அதிகாரி தீபக் கஜூரியா, அதே பகுதியைச் சேர்ந்த பர்வேஷ்குமார் ஆகிய மூவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பு சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. 
இதனிடையே, இந்த வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் விசாரணை என்ற பெயரில் அப்பாவிகளைத் துன்புறுத்தியதாகவும், பொய் வாக்குமூலம் அளிக்குமாறு அவர்களுக்கு நெருக்கடி அளித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக இவ்வழக்கில் சாட்சிகளான சச்சின் சர்மா, நீரஜ் சர்மா, சாஹில் சர்மா ஆகியோர் ஜம்முவில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இது தொடர்பான விசாரணை அந்த நீதிமன்றத்தில் நீதிபதி பிரேம் சாகர் முன்னிலையில் நடைபெற்று வந்தது.
இக்குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டவர்கள் குற்றம் இழைத்திருப்பது கண்கூடாகத் தெரிவதாக நீதிபதி பிரேம்சாகர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். 
எனவே,  சிறப்பு புலனாய்வுக் குழுவைச் சேர்ந்த காவல்துறை எஸ்எஸ்-பியான ஆர்.கே.ஜல்லா (தற்போது ஓய்வு பெற்றுள்ளார்), ஏஎஸ்பி பீர்ஸாதா நவீத், டிஎஸ்பி-க்கள் ஷேதம்பரி சர்மா, நிசார் ஹுசேன், உதவி ஆய்வாளர் உர்ஃபான் வானி, குற்றப்பிரிவைச் சேர்ந்த கேவல் கிஷோர் ஆகிய 6 பேர் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று அவர் போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com