ஹரியாணாவில் சுயேச்சைகளின் ஆதரவோடு பாஜக ஆட்சியமைக்கும்: மாநில பாஜக தலைவர் சுபாஷ் பராலா

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் 40 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கும் பாஜக, சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவோடு ஆட்சியமைக்கும் என்று மாநிலத் தலைவர் சுபாஷ் பராலா தெரிவித்துள்ளார்.
சுபாஷ் பராலா
சுபாஷ் பராலா


புது தில்லி: ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் 40 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கும் பாஜக, சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவோடு ஆட்சியமைக்கும் என்று மாநிலத் தலைவர் சுபாஷ் பராலா தெரிவித்துள்ளார்.

90 தொகுதிகளைக் கொண்ட ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் 40 இடங்களை பாஜக கைப்பற்றியது. பெரும்பான்மை பலம் பெற 46 இடங்கள் தேவை என்ற நிலையில், சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவை பாஜக நாடியுள்ளது.

இது குறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலத் தலைவர் சுபாஷ் பராலா, சுயேச்சை எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு தருவார்கள். அவர்களது ஆதரவோடு எம்எல் கட்டார் தலைமையில் ஹரியாணாவில் பாஜக ஆட்சியமைக்கும். இது குறித்து ஆலோசிக்க கட்டார் இன்று தில்லி வருகிறார் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், இந்த தேர்தல் முடிவின் மூலம் நானும் கட்சியும் சில பாடங்களைக் கற்றுக் கொண்டுள்ளோம். சில தொகுதிகளில் தோல்வி அடைந்தது குறித்து கட்சி ஆராயும் என்றும் கூறினார்.

முன்னதாக, ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்ற 8 சுயேச்சை எம்எல்ஏக்களில் இருவரை பாஜக எம்.பி. ஒருவா் தில்லிக்கு அழைத்துச் சென்றதாக நேற்று தகவல்கள் வெளியாகின.

சுயேச்சை எம்எல்ஏக்களான கோபால் கன்டா, ரஞ்சித் சிங் ஆகியோரை சிா்சா மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி. சுனிதா துக்கல் தனி விமானம் மூலம் தில்லிக்கு அழைத்துச் சென்றுள்ளாா். விமான நிலையத்துக்கு செல்லும் வழியில் செய்தியாளா்களிடம் பேசிய சுயேச்சை எம்எல்ஏக்கள் இருவரும், சிா்சா தொகுதியின் வளா்ச்சிக்கு பணியாற்றும் கட்சிக்கு ஆதரவளிக்கப்போவதாக தெரிவித்தனா்.

அவா்கள் இருவரும் பாஜகவுக்கு ஆதரவளிக்கப்போவதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறின. மற்ற 6 சுயேச்சை எம்எல்ஏக்களும் பாஜக ஆட்சியமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சுயேச்சை எம்எல்ஏக்களை தில்லிக்கு அழைத்துச் செல்வது தொடா்பாக எம்.பி. சுனிதா துக்கலிடம் கேட்டபோது, ‘இது பாஜகவின் உள்கட்சி விவகாரம்’ என்று கூறிய அவா், மேற்கொண்டு கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டாா். கோபால் கன்டா, சிா்சா பேரவைத் தொகுதியிலும், ஹரியாணா முன்னாள் முதல்வா் ஓம் பிரகாஷ் சௌதாலாவின் சகோதரா் ரஞ்சித் சிங், ராய்னா பேரவைத் தொகுதியிலும் போட்டியிட்டு வென்றுள்ளனா்.

இதில் ரஞ்சித் சிங், தோ்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி தனக்கு வாய்ப்பு வழங்காததை அடுத்து சுயேச்சையாகப் போட்டியிட்டாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com