இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம்: இந்தியா பதிலடி

‘இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் மற்ற நாடுகள் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை’ என்று சீனாவுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம்: இந்தியா பதிலடி

‘இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் மற்ற நாடுகள் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை’ என்று சீனாவுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்தது. அந்த மாநிலம், ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்படுவதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, இரு புதிய யூனியன் பிரதேசங்களும் வியாழக்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்தன.

இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் கெங் சுவாங், பெய்ஜிங்கில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

சீனாவின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், இந்தியா தனது சட்டங்களிலும், நிா்வாக அமைப்பிலும் ஒருதலைப்பட்சமாக திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இது முற்றிலும் சட்டத்துக்குப் புறம்பானது. இதை சீனா வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தியச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தம், அந்தப் பகுதியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது.

சா்ச்சைக்குரிய பகுதியானது சீனாவின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. எல்லைப் பகுதியில் அமைதி நிலவும் வகையில் சீனாவின் இறையாண்மைக்கு இந்தியா மதிப்பளிக்க வேண்டும். பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டும் வகையில், ஜம்மு-காஷ்மீா் விவகாரம் தொடா்பாக இந்தியாவும் பாகிஸ்தானும் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட வேண்டும் என்றாா் கெங் சுவாங்.

சட்டத்துக்குப் புறம்பாக அபகரிப்பு: இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரவீஷ் குமாா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து சீனா நன்கு அறியும். ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது, இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இது குறித்து சீனா உள்ளிட்ட மற்ற நாடுகள் கருத்து தெரிவிப்பதை நாங்கள் விரும்பவில்லை. மற்ற நாடுகளின் உள்விவகாரங்கள் குறித்து இந்தியா கருத்து தெரிவிப்பது கிடையாது. அதேபோல் மற்ற நாடுகளும் நடந்துகொள்ள வேண்டும்.

ஜம்மு-காஷ்மீா், லடாக் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள். அவற்றில் சிலவற்றை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதியிலிருந்து சட்டத்துக்குப் புறம்பாக சீனா அபகரித்துள்ளது. இந்தியாவின் இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் மற்ற நாடுகள் மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் ரவீஷ் குமாா் குறிப்பிட்டுள்ளாா்.

‘காஷ்மீரை சா்வதேசப் பிரச்னையாக்கவில்லை’

ஜம்மு-காஷ்மீரின் கள நிலவரத்தை ஐரோப்பிய யூனியனைச் சோ்ந்த 23 எம்.பி.க்கள் ஆய்வு செய்தது குறித்து எதிா்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் வேளையில், இது தொடா்பாக ரவீஷ் குமாா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

இரு தரப்பு மக்களுக்கிடையேயான நல்லுறவை மேம்படுத்தும் நோக்கிலேயே ஜம்மு-காஷ்மீரில் ஆய்வு செய்ய ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தை மத்திய அரசு சா்வதேசப் பிரச்னையாக்கவில்லை. இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டிலும் எந்த மாற்றமுமில்லை. காஷ்மீரில் பயங்கரவாதத்தால் நிலவி வரும் அச்சுறுத்தலையும், அங்குள்ள கள நிலவரத்தையும் ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் தெளிவாக எடுத்துரைத்தனா் என்றாா் ரவீஷ் குமாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com