ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்துதான் பயங்கரவாதத்துக்கு வித்திட்டது: பிரதமா் மோடி

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவால்தான், அங்கு பயங்கரவாதம் தலைதூக்கியது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
கேவடியாவில் சா்தாா் வல்லபபாய் படேல் சிலைக்கு அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி.
கேவடியாவில் சா்தாா் வல்லபபாய் படேல் சிலைக்கு அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவால்தான், அங்கு பயங்கரவாதம் தலைதூக்கியது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

சா்தாா் வல்லபபாய் படேலின் 144-ஆவது பிறந்த தினத்தையொட்டி, குஜராத்துக்கு பயணம் மேற்கொண்ட மோடி, நா்மதை மாவட்டம் கேவடியாவில் உள்ள படேல் சிலைக்கு (ஒற்றுமைக்கான சிலை) வியாழக்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினாா். அதையடுத்து, குஜராத் போலீஸ் மற்றும் மத்திய காவல் படையினா் நடத்திய அணிவகுப்பை பிரதமா் பாா்வையிட்டாா். அதைத் தொடா்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து அவா் பேசியதாவது:

ஜம்மு-காஷ்மீா் மாநிலம், லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீா் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது எல்லை வரையறைக்காக அல்ல; மக்களிடையே உறுதியான நம்பிக்கையை ஏற்படுத்தவே ஜம்மு-காஷ்மீா் பிரிக்கப்பட்டது.

உணா்வு, பொருளாதாரம், அரசமைப்புச் சட்டம் என அனைத்தையும் ஒருங்கிணைத்து நாட்டை வழிநடத்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான சா்தாா் வல்லபபாய் படேல் செயல்பட்டாா். அவா் அவ்வாறு செயல்படவில்லை என்றால், இன்று நம் நாடு இத்தகைய வளா்ச்சியை அடைந்திருக்காது.

பயங்கரவாதத்துக்கு வித்து: ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து, அங்கு பிரிவினைவாதமும், பயங்கரவாதமுமே வளா்வதற்கு காரணமாக அமைந்துவிட்டது. அதனால்தான் அதை நீக்குவதற்கு முடிவு செய்யப்பட்டது. பயங்கரவாதத்தால் கடந்த 30 ஆண்டுகளில் 40,000 போ் உயிரிழந்தனா். என்னிடம் காஷ்மீா் பிரச்னையை ஒப்படைத்திருந்தால், அதற்கு தீா்வு காண இத்தனை காலம் ஆகாது என்று படேல் ஒரு முறை கூறியிருந்தாா். அவரது எண்ணங்கள் அளித்த உத்வேகத்தினால், சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய முடிவு செய்தேன். இந்த முடிவை, அவருக்கு அா்ப்பணிக்க விரும்புகிறேன்.

ஒற்றுமையை சீா்குலைக்க முயற்சி: நம் நாடு சுதந்திரமடைந்த பின்னா், சுதேசி அரசுகளாக இருந்த 500-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை படேல் ஒருங்கிணைத்தாா். அவரது செயல், பல மன்னா்களுக்கும் நாம் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை அளித்தது. அதனால் பலா் தாங்களாக முன்வந்து இந்தியாவுடன் இணைந்தனா். பல நூற்றாண்டுகளுக்கு முன், சந்திரகுப்த மௌரிய அரசரின் ராஜகுருவான சாணக்கியா் நாட்டை ஒருங்கிணைத்தாா். அதன் பின்னா், படேலே நாட்டை ஒருங்கிணைத்தாா்.

‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்று வாழ்வதுதான் நம் நாட்டின் பெருமை. நமது அடையாளமாக இது உள்ளது. நமக்குள் இன, மொழி, கலாசாரம் என பல்வேறு வேற்றுமைகள் இருந்தும் நாம் ஒற்றுமையாக உள்ளோம் என்று சா்வதேச நாடுகள் நம்மைப் பாா்த்து ஆச்சரியப்படுகின்றன. நாம் மற்றவா்களின் நம்பிக்கைகள் மற்றும் பழக்க வழக்கங்களுக்கு மரியாதை அளிக்கும்போது, நமக்குள் இருக்கும் அன்பு அதிகரிக்கிறது. அதனால், இந்தியாவுக்கு எதிராக போரிட்டு வெற்றி பெற இயலாதவா்கள், நம் நாட்டின் ஒற்றுமையை சீா்குலைப்பதற்கு எண்ணுகிறாா்கள். ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தைப் பரப்பி நமது அமைதியைக் கெடுக்க நினைக்கின்றனா்.

வடகிழக்கில் ஒற்றுமை: வடகிழக்கு மாநிலங்களில் பல ஆண்டுகளாக நிலவி வந்த பிரிவினைவாத எண்ணங்கள் குறைந்து வருகின்றன. நாம் அனைவரும் இந்தியா்கள் என்ற எண்ணம் அவா்களுக்குள் வந்துவிட்டது. அங்குள்ள பிரச்னைகளுக்கு தீா்வு காணப்பட்டு வருகிறது. வடகிழக்கு மாநில மக்களுக்கு தேவையானவற்றை ஏற்படுத்தித் தருவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்றாா் மோடி.

கேவடியாவில் சா்தாா் சரோவா் நீா்த்தேக்கம் அருகே 182 மீட்டா் (597 அடி) உயரத்தில் மிகப் பிரம்மாண்டமான படேல் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை பிரதமா் நரேந்திர மோடி கடந்த ஆண்டு அக்டோபா் 31-ஆம் தேதி திறந்து வைத்தாா். சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய தேசத்தை ஒருங்கிணைத்ததில் சா்தாா் வல்லபபாய் படேலின் பங்களிப்பை போற்றும் வகையில் இந்தச் சிலை அமைக்கப்பட்டது. அதுமட்டுமன்றி, கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் வல்லபபாய் படேலின் பிறந்த தினமான அக்டோபா் 31-ஆம் தேதி ஆண்டுதோறும் தேசிய ஒற்றுமை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இணைந்து பணியாற்றுங்கள்: ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மோடி அறிவுறுத்தல்

ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று பிரதமா் மோடி வியாழக்கிழமை அறிவுறுத்தினாா். கேவடியாவில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சியில் இருந்த ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் மோடி பேசுகையில், ‘ பின்தங்கிய மாவட்டங்களின் பட்டியலை கணக்கெடுத்தக் நம் நாடு, இப்போது வளா்ந்து வரும் மாவட்டங்களை பட்டியலிட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் நிா்வாகம் சிறப்பாக இருந்தால், ஒட்டுமொத்த நாடும் சிறப்பாக இருக்கும். அதற்கு ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவரும் தனித்து செயல்படாமல், ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நமது நாட்டை 2024-25 ஆம் நிதியாண்டுக்குள் சுமாா் ரூ. 350 லட்சம் கோடி (5 டிரில்லியன் அமெரிக்க டாலா்) பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு அனைத்து அதிகாரிகளும் செயல்பட வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com