பஞ்சாப் பட்டாசுத் தொழிற்சாலை வெடி விபத்தில் 18 பேர் பலி

படாலா, செப். 4: பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் புதன்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

படாலா, செப். 4: பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் புதன்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:
குருதாஸ்பூர் மாவட்டத்தின் படாலா பகுதியில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் புதன்கிழமை மாலை 4 மணியளவில் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தொழிற்சாலைக்குள் இருந்த பணியாளர்கள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். 10}க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 
குடியிருப்புப் பகுதிகளுக்கிடையே இந்தத் தொழிற்சாலை உள்ளதால் அருகில் உள்ள சில வீடுகளிலும் விபத்தின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 
இதனிடையே, குருதாஸ்பூர் மாவட்ட உயரதிகாரிகள், காவல்துறையினர் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர்.
முதல்வர் இரங்கல்: பட்டாசுத் தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில முதல்வர் அமரீந்தர் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், "பட்டாசுத் தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்து, மிகவும் வருத்தமளிக்கிறது. மாவட்ட  காவல் துணை ஆணையர் மற்றும் மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமையில் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
சன்னி தியோல் இரங்கல்: 
விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நடிகரும், குருதாஸ்பூர் மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான சன்னி தியோல் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், "படாலாவில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டது மிகவும் வருத்தமளிக்கிறது. 
சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த மீட்புப் படையினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com