தேசிய கட்சி அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டாம்: திரிணமூல், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தல்

தேசிய கட்சி அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டாம் என்று திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தல் ஆணையத்தை திங்கள்கிழமை வலியுறுத்தின. 
தேசிய கட்சி அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டாம்: திரிணமூல், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தல்


தேசிய கட்சி அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டாம் என்று திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தல் ஆணையத்தை திங்கள்கிழமை வலியுறுத்தின. 

அவற்றின் தேசிய அளவிலான அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், அக்கட்சிகள் இவ்வாறு வலியுறுத்தியுள்ளன. 
தேர்தல் சின்னம் ஒதுக்கீட்டுச் சட்டம் 1968-இன்படி, ஒரு அரசியல் கட்சி, தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமெனில், அக்கட்சி மக்களவை அல்லது சட்டப் பேரவைத் தேர்தலில், குறைந்தது 4 மாநிலங்களில் 6 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். அக்கட்சிக்கு 4 மக்களவை எம்.பி.க்கள் இருக்க வேண்டும். குறைந்தது 4 மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருக்க வேண்டும். 

இந்நிலையில், கடந்த மக்களவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு மக்களிடையே போதிய ஆதரவு கிடைக்காமல் போனதை அடுத்து, அவற்றின் தேசிய கட்சி அந்தஸ்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று கேட்டு அக்கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. 

அதற்கு பதிலளிக்கும் வகையில் திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் பிரதிநிதிகள் தேர்தல் ஆணையத்தின் முன்பு திங்கள்கிழமை நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். 
அப்போது, மக்கள் தங்களுக்குத் தரும் ஆதரவையும், அங்கீகாரத்தையும் மேம்படுத்திக் கொள்ள மீண்டும் தங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அவை தேர்தல் ஆணையத்திடம் கோரின. பழைமையான கட்சிகளாக இருப்பதாலும், தேசிய தேர்தலில் முக்கியப் பங்கு வகித்திருப்பதாலும் சமீபத்திய தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் மட்டும் தங்களுக்கான தேசிய அங்கீகாரத்தை ரத்து செய்யக் கூடாது என்று அவை வலியுறுத்தின. 
இதில் இந்திய கம்யூனிஸ்ட் அளித்த விளக்கத்தில், காங்கிரஸ் கட்சியை அடுத்து, நாட்டில் உள்ள பழைமையான கட்சியாகவும், மக்களவையில் முதன்மையான எதிர்க்கட்சியாகவும் இந்திய கம்யூனிஸ்ட் விளங்குகிறது. 
சமீபத்திய மக்களவைத் தேர்தலில் மக்களிடையே தகுந்த ஆதரவு கிடைக்கவில்லை என்றாலும், சில மாநிலங்களில் ஆட்சியில் இருந்துள்ளோம். அரசியலமைப்புச் சட்டத்தை வலுப்படுத்த முக்கியப் பங்காற்றியுள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திரிணமூல் காங்கிரஸ் அளித்துள்ள விளக்கத்தில், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2014-ஆம் ஆண்டில் தான் தேசிய கட்சி அந்தஸ்து அளிக்கப்பட்டது. குறைந்தபட்சம் 2024-ஆம் ஆண்டு வரையாவது அது நீடிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 
தேசியவாத காங்கிரஸ் விளக்கத்தில், மகாராஷ்டிரத்தில் 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளோம். தொடங்கப்பட்ட காலத்திலேயே தேசிய கட்சிக்கான தகுதிகளை தேசியவாத காங்கிரஸ் கொண்டிருந்தது. கடந்த 2014 பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்ததற்காக தேசிய கட்சி அந்தஸ்தை இழக்க இயலாது. வரும் பேரவைத் தேர்தலில் மீண்டு வருவோம். தேசிய கட்சி அந்தஸ்தை தக்க வைக்க எங்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 
முன்னதாக, இந்திய கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்தலில் மக்களிடம் போதிய ஆதரவைப் பெறாததை அடுத்து, அப்போதே தேசிய கட்சி அந்தஸ்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டன. இந்நிலையில், தேசிய மற்றும் மாநில கட்சிகளின் அந்தஸ்தை 5 ஆண்டுகளுக்குப் பதிலாக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தல் ஆணையம் தனது விதிகளில் திருத்தம் கொண்டுவந்தது. இதனால் அந்தக் கட்சிகள் தேசிய அங்கீகாரத்தை இழக்கும் நெருக்கடியிலிருந்து அப்போது தப்பின. 
இந்நிலையில், கடந்த மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி 10 மக்களவைத் தொகுதிகளையும், சில சட்டப்பேரவைத் தொகுதிகளையும் கைப்பற்றியதை அடுத்து, அதன் தேசிய அந்தஸ்துக்கு ஏற்பட்டிருந்த நெருக்கடி விலகியது. எனினும், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸுக்கான நெருக்கடி தொடர்கிறது. 
தற்போதைய நிலையில், காங்கிரஸ், பாஜக, பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், மேகாலய தேசிய மக்கள் கட்சி ஆகியவையே தேசிய கட்சிகளாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com