சின்மயானந்த் மீது பாலியல் புகார் அளித்த பெண்ணின் விடுதி அறையில் சோதனை

உத்தரப் பிரதேசத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுவாமி சின்மயானந்த் (72) மீது பாலியல் புகார் அளித்த பெண் தங்கியிருக்கும் விடுதி அறையில் சிறப்பு புலனாய்வுக்


உத்தரப் பிரதேசத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுவாமி சின்மயானந்த் (72) மீது பாலியல் புகார் அளித்த பெண் தங்கியிருக்கும் விடுதி அறையில் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் செவ்வாய்க்கிழமை 6 மணி நேரம் சோதனை நடத்தினர்.
உத்தரப் பிரதேச மாநிலம், ஷாஜகான்பூரைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி ஒருவர், தன்னை சின்மயானந்த் பாலியல் ரீதியில் துன்புறுத்தியாக, சமூக வலைதளத்தில் கடந்த மாதம் விடியோ ஒன்றை வெளியிட்டார். அதன் பின்னர், மாயமான அந்த மாணவி ராஜஸ்தானில் மீட்கப்பட்டார்.
இதனிடையே, அந்தப் பெண்ணின் தந்தை அளித்த புகாரின்பேரில், ஷாஜகான்பூர் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி, சின்மயானந்த் மீது முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தை, தானாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம், கல்லூரி மாணவியின் புகார் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க உத்தரப் பிரதேச அரசுக்கு உத்தரவிட்டது. அதையடுத்து இந்த வழக்கை ஐஜி நவீன் அரோரா தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வந்தது.
இந்நிலையில், சின்மயானந்த் தன்னை ஓராண்டாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அந்த பெண் தெரிவித்தார். அதையடுத்து, அந்தப் பெண்ணின் குற்றச்சாட்டு தொடர்பாக ஆதாரம் தேடுவதற்காக, ஷாஜகான்பூரில் அந்தப் பெண் தங்கியிருந்த கல்லூரி விடுதி அறையில் சிறப்பு புலனாய்வுக் குழு செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியது. 
இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சின்மயானந்த் மீது புகார் அளித்த பெண் தங்கியிருக்கும் அறையை சோதனை செய்வதற்காக செவ்வாய்க்கிழமை மதியம் சிறப்பு புலனாய்வு குழுவினர் வந்தனர். அந்த பெண் தங்கியிருந்த அறையில் இருவர் தங்கலாம் என்றாலும், அவர் அங்கு தனியேதான் தங்கியிருந்தார். சுமார் 6 மணி நேரம் வரை சோதனை நடத்தினர். 
அதன் பின்னர் அந்த அறையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த சோதனையின்போது புகார் அளித்த பெண்ணும், அவரது பெற்றோரும் புலனாய்வுக் குழுவினருடன் இருந்தனர் என்று கூறப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com