எனக்கு நாடுதான் முக்கியம்; அந்த 'ஆப்'-ஐ டெலீட் செய்து விட்டேன்: பிரபல இயக்குநரின் ரகளை ட்வீட் 

எனக்கு நாடுதான் முக்கியம்; எனவே அந்த 'ஆப்'-ஐ டெலீட் செய்து விட்டேன் என்று பிரபல பாலிவுட் இயக்குநர் ஒருவர் செய்துள்ள ட்வீட் கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.
உபர் ஆப்
உபர் ஆப்

மும்பை: எனக்கு நாடுதான் முக்கியம்; எனவே அந்த 'ஆப்'-ஐ டெலீட் செய்து விட்டேன் என்று பிரபல பாலிவுட் இயக்குநர் ஒருவர் செய்துள்ள ட்வீட் கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 100 நாள்கள் சாதனைகள் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது.

அதில் பங்கேற்ற அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த மூன்று மாதங்களில் மத்திய அரசு மேற்கொண்ட சிறப்புத் திட்டங்கள், சீர்திருத்த நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பட்டியலிட்டார். அதைத் தொடர்ந்து அவரிடம் பல்வேறு கேள்விகளை செய்தியாளர்கள் முன்வைத்தனர். அவற்றுக்கு நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.

அப்போது அவர் வாகன விற்பனை சரிவு குறித்து பேசுகையில், வாகன விற்பனை சரிவுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஒருவர் சொந்தமாக கார் வாங்கி அதற்கு மாதந்தோறும் மாதத் தவணைக் கட்டுவதற்கு பதிலாக, தேவைப்படும் போது ஓலா அல்லது உபர் கால் டாக்ஸியைப் பயன்படுத்திக் கொள்வதே எளிது என்று நினைக்கலாம். இதுபோல லட்சக்கணக்கானோர் நினைப்பதால் வாகன விற்பனை சரிவடையலாம். இதுபோல பல காரணங்கள் வாகன விற்பனை சரிவுக்குக் காரணங்களாக அமைந்துள்ளன என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். அவரது இந்த கருத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தன.  

இந்நிலையில் எனக்கு நாடுதான் முக்கியம்; எனவே அந்த 'ஆப்'-ஐ டெலீட் செய்து விட்டேன் என்று பிரபல பாலிவுட் இயக்குநர் ஒருவர் செய்துள்ள ட்வீட் கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'ரா ஒன்' மற்றும் சமீபத்தில் வெளியாகி பாராட்டுகளைப் பெற்ற 'ஆர்ட்டிகிள் 15'  உள்ளிட்ட பாலிவுட் படங்களை இயக்கியவர் அனுபவ்  சின்ஹா. அவர் புதனன்று தனது ட்விட்டர் பக்கத்தில், 'தற்போதுதான் உபர் ஆப்-ஐ டெலீட் செய்தேன். தேசமே முதலில்'  என்று ட்வீட் செய்திருந்தார்.

அதற்காக அவரைப் பாராட்டியும் விமர்சித்தும் பலரும் பின்னூட்டங்களைப் பகிர்ந்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com