காஷ்மீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: ஐ.நா. பொதுச் செயலர் வலியுறுத்தல்

காஷ்மீர் பிரச்னைக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவாத்தை மூலம் தீர்வுகாண வேண்டுமென்று ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இந்தியா, பாகிஸ்தான்
காஷ்மீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: ஐ.நா. பொதுச் செயலர் வலியுறுத்தல்


காஷ்மீர் பிரச்னைக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவாத்தை மூலம் தீர்வுகாண வேண்டுமென்று ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இந்தியா, பாகிஸ்தான் தலைவர்களுடன் அவர் ஏற்கெனவே பேசியுள்ளதாக அவரது செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் கூறியுள்ளார்.
காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை சர்வதேச பிரச்னையாக்க பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. ஆனால், அதற்கு எவ்வித ஆதரவும் கிடைக்கவில்லை. இதனால், இந்தியாவுடன் பதற்றமான சூழல் உள்ளதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தவும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாத செயல்களைத் தூண்டிவிடவும் பாகிஸ்தான் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவுடன் தூதரக உறவுகளை குறைத்துக் கொண்ட அந்த நாடு, இரு நாடுகளிடையிலான ரயில் போக்குவரத்தையும் நிறுத்திக் கொண்டது.
இந்நிலையில், நியூயார்க்கில் புதன்கிழமை, ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸின் செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, காஷ்மீர் விவகாரம் தொடர்பான குட்டெரஸின் கருத்தை அவர் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா, பாகிஸ்தான் தலைவர்களுடன் ஐ.நா. பொதுச் செயலர் பேசியுள்ளார். இந்தப் பிரச்னையை இரு நாடுகளும் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அண்மையில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின்போது குட்டெரெஸ் சந்தித்தார். பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷியையும் அவர் சந்தித்தார்.
இதைத் தொடர்ந்து கடந்த திங்கள்கிழமை ஐ.நா.வுக்கான பாகிஸ்தானின் நிரந்தரத் தூதர் மலீகா லோதியை குட்டெரெஸ் சந்தித்தார். காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமென்று லோதி கோரிக்கை விடுத்ததன்பேரில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் எழுவதை ஐ.நா. விரும்பவில்லை என்பதையும், அனைத்துப் பிரச்னைகளையும் இரு நாடுகளும் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் குட்டெரெஸ் வலியுறுத்தினார் என்றார்.
இந்திய பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் விரைவில் ஐ.நா. பொதுசபைக் கூட்டத்தில் பங்கேற்க இருக்கின்றனர். அப்போது இருவரிடையே குட்டெரெஸ் மத்தியஸ்தம் செய்யும் திட்டமுள்ளதா? என்ற கேள்விக்கு, இந்த விஷயத்தில் ஐ.நா. ஏற்கெனவே முடிவு எடுத்து அறிவித்துவிட்டது. இரு தரப்பினரும் கேட்டுக் கொண்டால் மட்டுமே, இந்த விஷயத்தில் மத்தியஸ்தத்துக்கு ஐ.நா. முயற்சிக்கும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com