எல்லையில் இந்திய-சீன வீரர்கள் வாக்குவாதம்: பிரச்னை தீர்ந்ததாக ராணுவம் அறிவிப்பு

கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா-சீனா ராணுவ வீரர்களிடையே புதன்கிழமை கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இரு தரப்பு அதிகாரிகள் குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையை


கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா-சீனா ராணுவ வீரர்களிடையே புதன்கிழமை கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இரு தரப்பு அதிகாரிகள் குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து அன்றைய தினமே பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டதாக இந்திய ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ராணுவ உயரதிகாரிகள் கூறியதாவது:
கிழக்கு லடாக்கின் பாங்காங் டசோ ஏரி பகுதியில் புதன்கிழமை வழக்கம்போல இந்திய ராணுவ வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இந்திய வீரர்கள் அப்பகுதியில் ரோந்து செல்ல சீன ராணுவ வீரர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதற்கு மறுப்புத் தெரிவித்து இந்திய ராணுவ வீரர்கள் பதிலளித்தனர். இதனால், இரு தரப்பு வீரர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த இடத்தில் உண்மையான எல்லைப் பகுதி எது என்பது தொடர்பாக இரு தரப்பு வீரர்களுக்கும் வேறுபட்ட கருத்து இருந்ததால் இந்த வாக்குவாதம் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து சில மணி நேரத்திலேயே இரு தரப்பு அதிகாரிகள் குழுவினரும் சந்தித்துப் பேசினர். இதைத் தொடர்ந்து பிரச்னை முடிவுக்கு வந்தது என்று தெரிவித்தனர்.
134 கி.மீ நீளமும், 5 கி.மீ. அகலமும் கொண்ட பிரம்மாண்டமான பாங்காங் டசோ ஏரி இந்தியா மற்றும் திபெத் இடையே உள்ளது. திபெத்தை சீனா ஆக்கிரமித்துவிட்டதால் இதில் மூன்றில் ஒரு பகுதி சீனக் கட்டுப்பாட்டிலும், பிற பகுதி இந்தியாவின் கட்டுப்பாட்டிலும் உள்ளது. இந்த இடத்தில் சரியான எல்லை எது என்பது தொடர்பான பல ஆண்டுகாலப் பிரச்னை இன்னமும் தீர்க்கப்படாமல் உள்ளது.
இதனிடையே, இந்திய வீரர்கள் சீன எல்லைப் பகுதிக்குள் வந்த காரணத்தால்தான் அவர்களை வெளியேறுமாறு தங்கள் ராணுவத்தினர் வலியுறுத்தினர் என்று சீனத் தரப்பு விளக்கமளித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com