பாலியல் வன்கொடுமை வழக்கு: சுவாமி சின்மயானந்திடம் 7 மணி நேரம் விசாரணை

உத்தரப் பிரதேசத்தில் சட்டக் கல்லூரி மாணவி அளித்த பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுவாமி சின்மயானந்திடம் (72) சிறப்பு புலனாய்வுக் குழுவினர் 7


உத்தரப் பிரதேசத்தில் சட்டக் கல்லூரி மாணவி அளித்த பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுவாமி சின்மயானந்திடம் (72) சிறப்பு புலனாய்வுக் குழுவினர் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக விசாரணை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
சட்ட கல்லூரி மாணவி அளித்த புகார் தொடர்பாக சின்மயானந்திடம் வியாழக்கிழமை இரவு சுமார் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அதன் பின்னர், பலத்த பாதுகாப்புடன் சின்மயானந்த் அவரது இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஷாஜகான்பூரில் உள்ள அவரது ஆசிரமம் மற்றும் இல்லத்தில் உள்ள அவரது படுக்கை அறைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். 
அந்த அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சின்மயானந்த் இல்லத்தில் புகார் அளித்த பெண்ணின் முன்னிலையில் அவரிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. 
மேலும், வழக்கு விசாரணை முடியும் வரை ஷாஜகான்பூரை விட்டுச் செல்லக் கூடாது என்று சின்மயானந்த் அறிவுறுத்தப்பட்டுள்ளார் என்று அதிகாரிகள் கூறினர்.
உத்தரப் பிரதேச மாநிலம், ஷாஜகான்பூரைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி ஒருவர், தன்னை சின்மயானந்த் பாலியல் ரீதியில் துன்புறுத்தியாக, சமூக வலைதளத்தில் கடந்த மாதம் விடியோ ஒன்றை வெளியிட்டார். அதன் பின்னர், மாயமான அந்த மாணவி ராஜஸ்தானில் மீட்கப்பட்டார்.
இதனிடையே, அந்தப் பெண்ணின் தந்தை அளித்த புகாரின்பேரில், ஷாஜகான்பூர் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 27-ஆம் தேதி, சின்மயானந்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தை, தானாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம், கல்லூரி மாணவியின் புகார் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க உத்தரப் பிரதேச அரசுக்கு உத்தரவிட்டது. அதையடுத்து இந்த வழக்கை ஐஜி நவீன் அரோரா தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com