இந்தியா - ஸ்விட்சர்லாந்து இடையே 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா- ஸ்விட்சர்லாந்து இடையே 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சனிக்கிழமை கையெழுத்தாகின.
ஸ்விட்சர்லாந்தின் வில்லனூவ் நகரில் மகாத்மா காந்தியின் சிலையை  திறந்துவைக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
ஸ்விட்சர்லாந்தின் வில்லனூவ் நகரில் மகாத்மா காந்தியின் சிலையை  திறந்துவைக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

இந்தியா- ஸ்விட்சர்லாந்து இடையே 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சனிக்கிழமை கையெழுத்தாகின.
அரசுமுறைப் பயணமாக, ஸ்விட்சர்லாந்து சென்றுள்ள ராம்நாத் கோவிந்த், பெர்ன் நகரில் அந்நாட்டு அதிபர் உல்ரிக் மாரரை சனிக்
கிழமை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு ஸ்விட்சர்லாந்து ஆதரவு அளிக்கும் என்று ராம்நாத் கோவிந்திடம் அதிபர் உல்ரிக் மாரர் உறுதியளித்தார்.
இந்தியா, ஸ்விட்சர்லாந்து இடையே பொருளாதாரம், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இருவரும் உறுதிபூண்டனர்.
அதைத் தொடர்ந்து, பருவநிலை மாற்றத்தை ஒன்றிணைந்து எதிர்கொள்வது, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஒத்துழைப்பு அளிப்பது என்பன உள்ளிட்ட 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதையடுத்து, இந்தியா-ஸ்விட்சர்லாந்து தொழில்துறை மாநாட்டில் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில், ""இந்தியாவில் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இது, இந்தியப் பொருளாதாரத்தின் மீது அந்நிறுவனங்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. இந்தியாவுக்கு சிறந்த தொழில்நுட்பங்களை ஸ்விட்சர்லாந்து வழங்கி வருகிறது. இதேபோல், ஸ்விட்சர்லாந்துக்குத் தேவையான பணியாளர்களை இந்தியா அளித்து வருகிறது. இதன் மூலம் இரு நாடுகளுக்கிடையே நல்லுறவு நீடித்து வருகிறது. இந்தியாவின் பொருளாதாரம் சிறந்த வாய்ப்பை வழங்குவதால், ஸ்விட்சர்லாந்து நிறுவனங்கள் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்'' என்றார்.
காந்தி சிலை திறப்பு: முன்னதாக, மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு,  வில்லனூவ் நகரில் அவரது சிலையை ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
மகாத்மா காந்தியின் பிறந்த தின விழாவை வில்லனூவ் நகரம் கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்நகரத்திலும், உங்களது மனதிலும் அவருக்கு இடமளித்ததற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மகாத்மா காந்தியின் வாழ்க்கை, மக்களுக்குத் தொடர்ந்து ஊக்கமளித்துக் கொண்டே இருக்கிறது. அவரது வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டும்; சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும். ஸ்விட்சர்லாந்தும், இந்தியாவும் பன்முகத்தன்மைக்கு மதிப்பளிக்கும் நாடுகள். இவ்விரு நாடுகளின் நல்லுறவுக்கு மகாத்மா காந்தி சிறந்த வழிகாட்டியாக இருப்பார் என்றார் ராம்நாத் கோவிந்த்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com