ஏற்றுமதி வளர்ச்சிக்கு ரூ.50,000 கோடி: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

ஏற்றுமதி வளர்ச்சிக்காக, ரூ.50,000 கோடி வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
தில்லியில் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை பேட்டியளிக்கும்  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். உடன்  நிதித் துறை இணையமைச்சர் அனுராக் தாக்குர், பொருளாதார விவகாரங்களுக்கான  செயலர் அதானு சக்கரவர்த்தி.
தில்லியில் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை பேட்டியளிக்கும்  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். உடன்  நிதித் துறை இணையமைச்சர் அனுராக் தாக்குர், பொருளாதார விவகாரங்களுக்கான  செயலர் அதானு சக்கரவர்த்தி.

ஏற்றுமதி வளர்ச்சிக்காக, ரூ.50,000 கோடி வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டிலும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்து காணப்பட்டது. இதையடுத்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, வங்கிகள் கடன் வழங்கும் திறனை அதிகப்படுத்தவும், ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிக்கவும் மத்திய அரசு அண்மையில் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது. நிலக்கரிச் சுரங்கம், ஒப்பந்த அடிப்படையிலான உற்பத்தி, ஒற்றை இலச்சினை சில்லறை வர்த்தகம், மின்னணு ஊடகம் ஆகிய துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியது.

அதைத் தொடர்ந்து, வங்கித் துறையில் மிகப்பெரிய சீர்திருத்தமாக, நாட்டின் பொதுத் துறை வங்கிகளை இணைத்து 12 வங்கிகளாக மத்திய அரசு குறைத்தது. மத்திய அரசின் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் ஏற்றுமதித் துறையும், சரக்கு-சேவை வரி விதிப்பு முறையால் மனை வணிகத் தொழிலும் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தன.

இவ்விரு துறைகளின் வளர்ச்சியையும் ஊக்குவிப்பதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஏற்றுமதி செய்யப்படும் பொருள்கள் மீது விதிக்கப்படும் வரியைத் திரும்பப் பெறுவதற்கான புதிய திட்டம், வரும் ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும்.
இத்திட்டத்தின் மூலம் ஏற்கெனவே மத்திய அரசு ரூ.40,000 கோடி முதல் ரூ.45,000 கோடி வரை செலுத்தி வருகிறது. 

புதிய ஏற்றுமதி ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் ஏற்றுமதியாளர்களுக்கு வரிச்சலுகை உள்ளிட்ட வகைகளில் மேலும் ரூ.50,000 கோடியை மத்திய அரசு வழங்கவுள்ளது.

இதுதவிர, வங்கிகளிடம் இருந்து ஏற்றுமதி நிறுவனங்கள் பெறும் கடனுக்காக, ஏற்றுமதி கடன் உத்தரவாதக் கழகம் அதிக அளவில் காப்பீடு வழங்கும் வகையில், ஆண்டுக்கு ரூ.1,700 கோடி அளிக்கப்படவுள்ளது. 

இது, ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு வங்கிகள் அதிக அளவில் கடனுதவி வழங்குவதற்கு  உதவிகரமாக இருக்கும்.

முக்கியத் துறைகளில் ஏற்றுமதிக்கு கடனுதவி வழங்குவது குறித்து ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருகிறது. 

இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி முடிவெடுத்தால், அந்த வங்கியிடம் இருந்து ஏற்றுமதிக்காக ரூ.36,000 கோடி முதல் ரூ.68,000 கோடி வரை கடன் கிடைக்கும். மிகை வரியைத் திரும்பப் பெறும் நடைமுறை இந்த மாத இறுதியில் இருந்து முற்றிலும் மின்னணுமயமாக்கப்படும். விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலும் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கு ஏற்படும் காலவிரயத்தைக் குறைப்பதற்கான செயல்திட்டம் வரும் டிசம்பருக்குள் வகுக்கப்படும். 

சில நாடுகளுடன் தடையற்ற வர்த்தகம் மேற்கொள்வதற்கு இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இச்சலுகையை ஏற்றுமதி நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்வதற்கு சிறப்புத் திட்டம் வகுக்கப்படும்.

மார்ச்சில் மாபெரும் விற்பனை கண்காட்சி: உலகப் புகழ்வாய்ந்த துபை விற்பனை கண்காட்சியைப் போலவே, இந்தியாவில் 4 இடங்களில், வரும் மார்ச் மாதம் மிகப்பெரிய அளவில் விற்பனை கண்காட்சி நடத்தப்படும். 

அந்தத் திருவிழாவில் தங்க ஆபரணங்கள், நவரத்தினங்கள், கைவினைப் பொருள்கள், ஜவுளி, தோல் பொருள்கள் ஆகியவை விற்பனை செய்யப்படும். 
இதுதவிர, யோகாசனப் பயிற்சி, சுற்றுலா ஆகியவையும் அந்தத் திருவிழாவில் இடம் பெறும்.

கட்டுப்பாட்டில் பணவீக்க விகிதம்: நாட்டின் பணவீக்க விகிதம் 4 சதவீதத்துக்கும் குறைவாகக் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. தொழில் துறை உற்பத்தியும், முதலீடுகளும் அதிகரித்து வருவதால், பொருளாதாரம் வலுவடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அரசின் அறிவிப்புச் சலுகைகள், அடுத்த காலாண்டில் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு உதவிகரமாக இருக்கும் என்றார் நிர்மலா சீதாராமன்.  

19-இல் வங்கித் தலைவர்களுடன் சந்திப்பு: வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைப்பது குறித்து விவாதிப்பதற்காக, பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும் 19-ஆம் தேதி சந்திக்கவுள்ளார்.

ரிசர்வ் வங்கி கடந்த பிப்ரவரியில் இருந்து 1.1 சதவீத அளவு வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது.

ஆனால், இந்த வட்டிக் குறைப்புச் சலுகையை வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் இன்னும் முற்றிலுமாக வழங்கவில்லை. 

சில வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கத் தொடங்கியுள்ளன. 
ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு ஏற்ப வட்டிக் குறைப்பை துரிதப்படுத்துமாறு வங்கிகளை மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. 

இதற்காக, அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களை வரும் 19-ஆம் தேதி சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

வீட்டு வசதித் துறையை ஊக்குவிக்க ரூ. 20,000

கட்டுமானத்தில் உள்ள வீட்டு வசதித் திட்டங்களை நிறைவு செய்வதற்காக, மத்திய அரசு சார்பில் ரூ.20,000 கோடி வழங்கப்படும் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

மொத்தத் தொகையில் ரூ.10,000 கோடியை அரசு வழங்கும். எஞ்சிய தொகை, வெளியாட்களிடம் இருந்து பெறப்படும். வாராக்கடன் இல்லாத அல்லது திவால் நடவடிக்கையை எதிர்கொள்ளாத வீட்டு வசதி நிறுவனங்கள், இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும். இதனால், பாதியில் நிற்கும் வீட்டு வசதித் திட்டங்கள் நிறைவுபெறும். இதன்மூலம் 3.5 லட்சம் பேர் பயன்பெறுவர்.

வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமும் குறைக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் பயன்பெறும் வகையில் வட்டிச் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. வீட்டு வசதி நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து கடனுதவி பெறுவதற்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com