சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ராஜீவ் குமார் ஆஜராகவில்லை

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கின் விசாரணைக்காக, மேற்கு வங்க சிஐடி கூடுதல் தலைமை இயக்குநரும் கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையருமான ராஜீவ் குமார், சனிக்கிழமை சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகவில்லை.
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ராஜீவ் குமார் ஆஜராகவில்லை

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கின் விசாரணைக்காக, மேற்கு வங்க சிஐடி கூடுதல் தலைமை இயக்குநரும் கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையருமான ராஜீவ் குமார், சனிக்கிழமை சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகவில்லை.
இந்த வழக்கில் அவரைக் கைது செய்வதற்கு சிபிஐ-க்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை, கொல்கத்தா உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நீக்கியது. இதையடுத்து, கொல்கத்தாவிலுள்ள சிபிஐ அலுவலகத்தில் சனிக்கிழமை விசாரணைக்கு ஆஜராகும்படி, அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. ஆனால், அவர் நேரில் ஆஜராகவில்லை. அவரது செல்லிடப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் கொல்கத்தாவிலிருந்து வேறெங்கும் சென்றுவிடாமல் இருப்பதற்கான நடவடிக்கையை சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
வழக்கு விவரம்: மேற்கு வங்கத்தில் சாரதா நிதி நிறுவனம், அதிக வட்டி வழங்கப்படும் என்று உறுதியளித்து, லட்சக்கணக்கான மக்களிடம் இருந்து ரூ.2,500 கோடியை வசூலித்து மோசடியில் ஈடுபட்டது. இந்த மோசடி குறித்து விசாரிப்பதற்காக, அப்போதைய பிதான்நகர் காவல்துறை ஆணையராக இருந்த ராஜீவ் குமார் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.  ஆனால், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் கடந்த 2014-இல் உத்தரவிட்டது. அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட சிபிஐ, வழக்கின் முக்கிய ஆவணங்கள் சிலவற்றை ராஜீவ் குமார் அழித்துவிட்டதாகவும், சில ஆவணங்களை சிபிஐ வசம் ஒப்படைக்கவில்லை எனவும் குற்றம்சாட்டியது. 
இதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், ஷில்லாங்கில் அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில், அவரைக் கைது செய்வதற்கான இடைக்கால தடையை, கொல்கத்தா உயர்நீதிமன்றம் நீட்டித்து வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அந்த தடை நீக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com