ஃபரூக் அப்துல்லாவை ஆஜர்படுத்தக் கோரும் வழக்கு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து ஆஜர்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த
ஃபரூக் அப்துல்லாவை ஆஜர்படுத்தக் கோரும் வழக்கு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து ஆஜர்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆள்கொணர்வு மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கும், அந்த மாநில நிர்வாகத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, எஸ்.ஏ. நஸீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோ சார்பில் வழக்குரைஞர் அஜ்மல்கான் ஆஜராகி, "அடிப்படை உரிமைகளின் பாதுகாவலனாக நீதிமன்றம் உள்ளது. இது ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கும் பொருந்தும். ஜம்மு-காஷ்மீர் மக்கள் இந்தியாவின் குடிமக்கள். அப்துல்லாவை அதிகாரிகள் இதுபோன்று நடத்த முடியாது. ஃபரூக் அப்துல்லா எந்த சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் அல்லது கைது செய்யப்பட்டுள்ளார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இது அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமையை மீறும் செயலாக உள்ளது. ஆகவேதான், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரும் வகையில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது' என்றார்.

அப்போது, நீதிபதிகள் "சென்னையில் நிகழ்ச்சிக்கு அப்துல்லாவை அழைத்துச் செல்ல வேண்டுமா?' என்று கேள்வி எழுப்பினர். அதற்கு வைகோ தரப்பு வழக்குரைஞர், "அது எங்களது கோரிக்கைகளில் ஒன்றாகும். முதலாவது கோரிக்கையே ஃபரூக் அப்துல்லாவுக்கு கருத்துச் சுதந்திரம் அளிக்கப்படவில்லை. அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள்அவர் விஷயத்தில் மீறப்பட்டுள்ளது. அதனால், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது' என்றார்.

அப்போது, நீதிபதிகள்" "அவர் தடுப்புக் காவலில் உள்ளாரா?' என கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா, "தாக்கல் செய்யப்பட்ட மனுவின் நகல் என்னிடம் இல்லை. இது தொடர்பாக உரிய அறிவுத்தலைப் பெற வேண்டியுள்ளது' என்றார். 
மேலும், வைகோவின் மனுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த துஷர் மேத்தா, "ஆள்கொணர்வு மனுத் தாக்கல் செய்வதற்கு வைகோவுக்கு எவ்வித முகாந்திரமும் இல்லை. உரிமையும் இல்லை. அவர் அப்துல்லாவின் உறவினர் அல்ல. அப்துல்லாவின் உறவினர்கள் இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்' என்றார்.

உத்தரவு: இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் அமர்வு, இந்த மனு மீது மத்திய உள்துறை அமைச்சகமும், ஜம்மு-காஷ்மீர் மாநில நிர்வாகமும் வரும் 30-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு மனு மீதான விசாரணையை அன்றைய தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com