சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: காவல்துறை அதிகாரி ராஜீவ் குமார் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகவில்லை

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணைக்காக கொல்கத்தா காவல்துறை முன்னாள் ஆணையர் ராஜீவ் குமாருக்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியிருந்த நிலையில், திங்கள்கிழமை விசாரணைக்கு அவர்
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: காவல்துறை அதிகாரி ராஜீவ் குமார் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகவில்லை

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணைக்காக கொல்கத்தா காவல்துறை முன்னாள் ஆணையர் ராஜீவ் குமாருக்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியிருந்த நிலையில், திங்கள்கிழமை விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. 
சால்ட் லேக் பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக திங்கள்கிழமை மதியம் 2 மணியளவில் ஆஜராகுமாறு ராஜீவ் குமாருக்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியிருந்தது. 
அந்த அழைப்பாணையை மாநில தலைமைச் செயலகத்தில் உள்ள மேற்கு வங்க காவல்துறை இயக்குநர் வீரேந்திராவிடம் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை ஒப்படைத்திருந்தனர். எனினும், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. 
சிபிஐ விசாரணைக்கு ஆஜராகாமல் ராஜீவ் குமார் தவிர்த்தது இது 2-ஆவது முறையாகும். தற்போது மேற்கு வங்க காவல்துறை குற்றவியல் புலனாய்வு இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநராக இருக்கும் ராஜீவ் குமார், கடந்த சனிக்கிழமையும் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்தது குறிப்பிடத்தக்கது. 
இதனிடையே, திங்கள்கிழமை காலை மீண்டும் தலைமைச் செயலகத்துக்கு வந்த சிபிஐ அதிகாரிகள், ராஜீவ் குமார் சனிக்கிழமை விசாரணைக்காக ஆஜராகாதது தொடர்பான கடிதத்தை அரசு தலைமைச் செயலர் மலய் டே, உள்துறைச் செயலர் ஆலாபன் பந்தோபாத்யாய் ஆகியோரிடம் அளித்தனர். மேலும், ராஜீவ் குமாரை கைது செய்ய விலக்கு அளித்திருந்த உத்தரவை கொல்கத்தா உயர்நீதிமன்றம் திரும்பப் பெற்றது தொடர்பான உத்தரவையும் அந்தத் கடிதத்துடன் சிபிஐ அதிகாரிகள் இணைத்திருந்தனர். 
எந்தக் காரணத்தின் அடிப்படையில் ராஜீவ் குமார் ஒரு மாத விடுப்பில் சென்றுள்ளார்? அவர் எங்கு இருக்கிறார்? எப்போது அவர் மீண்டும் பணியில் இணைவார்? போன்ற கேள்விகளை அந்தக் கடிதத்தில் சிபிஐ கேட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. 
ரூ.2,500 கோடி மதிப்பில் மோசடி நிகழ்ந்ததாக கூறப்படும் சாரதா நிதி நிறுவன மோசடி குறித்து முதலில் மேற்கு வங்க அரசு நியமித்த சிறப்பு விசாரணைக் குழு விசாரித்தது. அந்தக் குழுவில் இருந்த ராஜீவ் குமார், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தபோது முக்கிய ஆதாரங்களை மறைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாகவும், சாரதா நிதி நிறுவன மோசடி குறித்தும் சிபிஐ தற்போது விசாரித்து வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com