தேவைப்பட்டால் காஷ்மீர் செல்வேன்: நீதிபதி ரஞ்சன் கோகோய்

"ஜம்மு-காஷ்மீரில் உயர்நீதிமன்றத்தை மக்கள் அணுக முடியாத சூழல் நிலவுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் மிக மிகத் தீவிரமானவை; இதுதொடர்பாக, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அறிக்கை அளிக்க
ஜம்மு-காஷ்மீரில் உயர்நீதிமன்றத்தை மக்கள் அணுக முடியவில்லை என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் மிக மிகத் தீவிரமானவை. இந்த விவகாரத்தை கவனத்தில் கொள்ள வேண்டிய பொறுப்பு உச்சநீதிமன்றத்துக்கு உள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் உயர்நீதிமன்றத்தை மக்கள் அணுக முடியவில்லை என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் மிக மிகத் தீவிரமானவை. இந்த விவகாரத்தை கவனத்தில் கொள்ள வேண்டிய பொறுப்பு உச்சநீதிமன்றத்துக்கு உள்ளது.

"ஜம்மு-காஷ்மீரில் உயர்நீதிமன்றத்தை மக்கள் அணுக முடியாத சூழல் நிலவுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் மிக மிகத் தீவிரமானவை; இதுதொடர்பாக, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அறிக்கை அளிக்க வேண்டும். தேவைப்பட்டால் நானே காஷ்மீருக்கு செல்வேன்' என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பான பல்வேறு மனுக்கள், உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, எஸ்.அப்துல் நஸீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரிக்கப்பட்டன. காஷ்மீரில் சட்டவிரோதமாக சிறார்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி, குழந்தைகள் உரிமை ஆர்வலர் ஏனாக்ஷி கங்குலி, பேராசிரியர் சாந்தா சின்ஹா ஆகியோர் தாக்கல் செய்த பொது நல மனு மீது விசாரணை நடைபெற்றது.

அப்போது, மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் ஹுசேஃபா அகமதி வாதிடுகையில், "ஜம்மு-காஷ்மீரில் உயர்நீதிமன்றத்தை அணுகுவது மக்களுக்கு சிரமமான விஷயமாக உள்ளது' என்றார்.

அதேசமயம், ஜம்மு-காஷ்மீர் அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "ஜம்மு-காஷ்மீரிலுள்ள அனைத்து நீதிமன்றங்களும் செயல்படுகின்றன. அங்கு மக்கள் நீதிமன்றங்களும் (லோக்-அதாலத்) நடத்தப்பட்டுள்ளன' என்றார்.

இதையடுத்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறுகையில், "ஜம்மு-காஷ்மீரில் உயர்நீதிமன்றத்தை மக்கள் அணுக முடியவில்லை என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் மிக மிகத் தீவிரமானவை. இந்த விவகாரத்தை கவனத்தில் கொள்ள வேண்டிய பொறுப்பு உச்சநீதிமன்றத்துக்கு உள்ளது. இதுதொடர்பாக, ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அறிக்கை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். தேவை ஏற்பட்டால், நான் நேரடியாக ஸ்ரீநகருக்கு சென்று, தலைமை நீதிபதியுடன் பேசுவேன். அதேசமயம், மேற்கண்ட குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்பது தெரியவந்தால், மனுதாரர்கள் நடவடிக்கையை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்' என்றார்.

"இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை எடுங்கள்': ஜம்மு-காஷ்மீரில் பத்திரிகையாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை உடனடியாக நீக்கக் கோரி "காஷ்மீர் டைம்ஸ்' பத்திரிகையின் ஆசிரியர் அனுராதா பாசின், காங்கிரஸ் ஆதரவாளர் தெசீன் பூனாவாலா ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனுக்களும், ஜம்மு-காஷ்மீரில் மருந்துப் பொருள்கள் கிடைக்கவில்லை என சிலர் தாக்கல் செய்திருந்த மனுக்களும் மேற்கண்ட அமர்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது.

அப்போது, அனுராதா பாசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் விருந்தா குரோவர், ""காஷ்மீர் பள்ளத்தாக்கில் இணையதள, செல்லிடப்பேசி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன'' என்று வாதிட்டார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ""இன்னமும் நிலைமையில் எந்த மாற்றமும் இல்லையா? செல்லிடப்பேசி, இணையதள சேவைகள் போன்ற உள்ளூர் பிரச்னைகளுக்கு ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்திலேயே தீர்வு காண முடியும். அங்கு நிலவி வரும் சூழல் குறித்து உயர்நீதிமன்றம் நன்கு அறிந்திருக்கும் என்பதால், இந்தப் பிரச்னைகளை உயர்நீதிமன்றம் விசாரிப்பதே பொருத்தமாக இருக்கும்'' என்றனர். 

அதற்கு வழக்குரைஞர் குரோவர், ""காஷ்மீர் பள்ளத்தாக்கில் போக்குவரத்து சேவைகளும் முடங்கியுள்ளதால், ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தை நாடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது'' என்றார். அப்போது, மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் குறுக்கிட்டு, ""மனுதாரர்களின் குற்றச்சாட்டுகள் நேர்மையானதாக இல்லை. ஜம்மு-காஷ்மீரிலிருந்து செய்தித்தாள்கள் வெளியிடப்படுகின்றன. அதற்கு அரசு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது'' என்று வாதிட்டார்.

"கட்டுப்பாடுகள் ஏன்?': இதையடுத்து நீதிபதிகள், ""ஒன்றிரண்டு செய்தித்தாள்கள் வெளிவருவது குறித்து மனுதாரர்கள் குற்றம்சாட்டவில்லை. மக்களுக்கான சேவைகள் வழங்கப்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதற்கான காரணங்கள் என்ன?'' என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த கே.கே. வேணுகோபால், ""பிரிவினைவாதிகள், நாட்டு எல்லைக்கு வெளியே உள்ள பயங்கரவாதிகள், வெளிநாடுகளிலிருந்து பெறும் நிதியுதவியுடன் இயங்கும் உள்ளூர் பயங்கரவாதிகள் என ஜம்மு-காஷ்மீர் மும்முனைகளில் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் கடந்த மாதம் 5-ஆம் தேதி வரை பயங்கரவாதத் தாக்குதல்களால், 41,866 பேர் இறந்துள்ளனர்; 5,292 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்'' என்றார்.

"உண்மை இல்லை': ஜம்மு-காஷ்மீர் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ""கடந்த மாதம் 5-ஆம் தேதி முதல் 10.52 லட்சம் நோயாளிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். மருந்துகளுக்கு எந்தத் தட்டுப்பாடும் இல்லை. 3 மாதங்களுக்குத் தேவையான மருந்துகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஜம்மு, லடாக் பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டுவிட்டன. நீதிமன்றத்தில் மனுதாரர்கள் தெரிவிக்கும் கருத்துகளில் உண்மை இல்லை'' என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், ""ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பிரமாணப் பத்திரமாக மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். அதே வேளையில், ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புவதற்கான முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என நம்புகிறோம்'' என்றனர். 

மக்கள் மாநாட்டுக் கட்சியின் மனு ஏற்பு: ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக ஜம்மு-காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை விசாரணைக்கு ஏற்றது.

இந்த விவகாரத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுடன் சேர்த்து இந்த மனுவையும் அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது. இந்த மனுக்கள் மீதான விசாரணை அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாரிகாமிக்கு அனுமதி: தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முகமது யூசுஃப் தாரிகாமி (72), ஜம்மு-காஷ்மீர் திரும்புவதற்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதியளித்தது.

ஜம்மு-காஷ்மீரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த தாரிகாமி, உச்சநீதிமன்ற உத்தரவின்படி, ஸ்ரீநகரிலிருந்து தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சொந்த மாநிலத்துக்கு திரும்ப அனுமதி கோரி, உச்சநீதிமன்றத்தில் தாரிகாமி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான  அமர்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், "மருத்துவர்கள் அனுமதித்தால் தாரிகாமி காஷ்மீருக்கு செல்லலாம். அவருடைய வீட்டுக்கு செல்வதற்கு, யாரிடமும் அவர் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை' என்றனர்.

குலாம் நபி ஆசாதுக்கு அனுமதி

ஜம்மு-காஷ்மீருக்குப் பயணம் மேற்கொள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாதுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஸ்ரீநகர், பாரமுல்லா, அனந்த்நாக், ஜம்மு ஆகிய 4 மாவட்டங்களுக்கு செல்ல அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், அரசியல்ரீதியான பொதுக் கூட்டம் எதையும் நடத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த வழக்கு விசாரணையின்போது, குலாம் நபி ஆசாத் சார்பில் மூத்த வழக்குரைஞர் ஏ.எம்.சிங்வி வாதிட்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் குலாம் நபி ஆசாத் கூறுகையில், ""ஜம்மு-காஷ்மீர் மக்கள் குறித்து மத்திய அரசும், ஜம்மு-காஷ்மீர் நிர்வாகமும் அக்கறை கொள்ளவில்லை. என் குடும்ப உறுப்பினர்களைச் சந்திப்பதற்காக நான் ஜம்மு-காஷ்மீர் செல்லவில்லை. அங்குள்ள அப்பாவி மக்களின் நிலை குறித்து அறிந்துகொள்ளவே அங்கு செல்கிறேன். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வராகிய நான், அந்த மாநிலத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படாமல், விமான நிலையத்திலேயே மூன்று முறை தடுத்து நிறுத்தப்பட்டேன்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com