பிறந்த தினம்: நர்மதை அணையை இன்று பார்வையிடுகிறார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்த நாளையொட்டி, குஜராத் மாநிலத்தில் நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணைக்குச் சென்று செவ்வாய்க்கிழமை பார்வையிடுகிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்த நாளையொட்டி, குஜராத் மாநிலத்தில் நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணைக்குச் சென்று செவ்வாய்க்கிழமை பார்வையிடுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை 69-ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அன்றைய தினம் காலை, நர்மதை மாவட்டத்தில் உள்ள கேவடியா என்னுமிடத்தில் சர்தார் சரோவர் அணையைப் பார்வையிடுகிறார். அதைத் தொடர்ந்து, நர்மதை அணை தனது முழு கொள்ளளவை எட்டியதைக் கொண்டாடும் விதமாக, அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
"நமாமி நர்மதா மஹோத்சவ்' என்ற பெயரில் நடைபெறும் அந்தக் கூட்டத்தில் சுமார் 10,000 பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்தார் சரோவர் அணையின் உயரத்தை 121.92 மீட்டரில் இருந்து 138.68 மீட்டராக உயர்த்துவதற்கு நர்மதை கட்டுப்பாட்டு ஆணையம் கடந்த 2014-ஆம் தேதி அனுமதி அளித்தது. அதன் பிறகு உயர்த்தப்பட்ட அணையை பிரதமர் மோடி கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி திறந்து வைத்தார். அண்மையில் பெய்த மழை வெள்ளம் காரணமாக, நர்மதை அணை முதல் முறையாக தனது முழு கொள்ளளவை ஞாயிற்றுக்கிழமை மாலை எட்டியது.
கேவடியாவில் நடைபெறும் பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு அணைக்கரைப் பகுதிகள், ஒற்றுமையின் சிலை என்றழைக்கப்படும் சர்தார் வல்லபபாய் படேலின் சிலை ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மோடி ஆய்வு செய்யவுள்ளார். அதைத் தொடர்ந்து கருடேஸ்வர் கிராமத்தில் உள்ள தத்தாத்ரேயர் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை மதியம் சென்று அவர் வழிபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை அதிகாலையில் காந்தி நகரில் இருந்து கேவடியாவுக்குச் செல்லும் முன், ரெய்சினாவில் உள்ள தனது தாயார் ஹீரா பென்னைச் சந்தித்து மோடி ஆசி பெறுகிறார். பிரதமரின் பயணத் திட்ட விவரங்களை குஜராத் மாநில அரசு திங்கள்கிழமை 
வெளியிட்டது.
ம.பி.யில் போராட்ட அறிவிப்பு: இதனிடையே, பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நர்மதை அணைத் திட்டப் பணிகளால் பாதிக்கப்பட்டவர்கள், மத்தியப் பிரதேச மாநிலம், பர்வானி மாவட்டத்தில் போராட்டத்துக்கு திட்டமிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com